ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க வணிக நிறுவனங்கள், கடைகள், அலுவலகங்கள், வீடுகள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் வேண்டுகோள் விடுத்து உள்ளார். மேலும், வாகன போக்குவரத்து அதிகமாக உள்ள சாலைகள், சிக்னல்கள் உள்ளிட்ட இடங்களிலும், போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், பார்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கூறியதாவது:–
குற்ற சம்பவங்களை தடுக்கவும், அந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. அதன்படி வங்கிகளில் 397 கேமராக்களும், ஏ.டி.எம். மையங்களில் 497 கேமராக்களும், கோவில்களில் 489 கேமராக்களும், பெட்ரோல் பங்குகளில் 60 கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளன.
டாஸ்மாக் கடைகள் மற்றும் அவற்றின் பார்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. டாஸ்மாக் கடையின் முன்புறமும், பார்களில் 2 இடங்களிலும் கேமராக்கள் பொருத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுவரை 90 சதவீத பார்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதேபோல் பஸ் நிலையம், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், குடியிருப்புகள் போன்ற பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.