சென்னிமலையில் லாரி கவிழ்ந்தது; டிரைவர்கள் உயிர்தப்பினர்
சென்னிமலையில் லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர்கள் உயிர்தப்பினார்கள்.
சென்னிமலை,
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து திருப்பூர் மாவட்டம் காங்கேயத்துக்கு பருத்தி கொட்டைகளை ஏற்றிய லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. லாரியை சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த வீரமணி (வயது 45) என்பவர் ஓட்டினார். மேலும் மாற்று டிரைவராக சுரேஷ் என்பவரும் இருந்தார்.
இந்த லாரி நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் சென்னிமலை வடக்கு ராஜ வீதியில் இருந்து ஒரு வளைவில் திரும்பியது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர்கள் 2 பேரும் லாரியில் இருந்து வெளியே குதித்து சிறு காயத்துடன் உயிர்தப்பினார்கள். மேலும் அதிகாலையில் நேரம் என்பதால் மக்கள் நடமாட்டம் இல்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சென்னிமலை வடக்கு ராஜ வீதியில் இருந்து கிழக்கு ராஜ வீதிக்கு வாகனங்கள் திரும்பும் போது அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. குறிப்பாக கனரக வாகனங்கள்தான் அதிகஅளவில் விபத்தில் சிக்குகிறது. இதனை தடுக்க போலீசார் எச்சரிக்கை தடுப்பு பலகைகள் வைத்து உள்ளனர். ஆனாலும் விபத்துகள் நடந்து வண்ணமே உள்ளது.
எனவே போலீசார் சென்னிமலை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வேகமாக வரும் லாரி ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.