மயானத்துக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் உடலை வயல் வழியாக எடுத்து செல்லும் அவலம்


மயானத்துக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் உடலை வயல் வழியாக எடுத்து செல்லும் அவலம்
x
தினத்தந்தி 14 Dec 2018 4:15 AM IST (Updated: 14 Dec 2018 2:11 AM IST)
t-max-icont-min-icon

வலங்கைமான் அருகே மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் உடலை வயல் வழியாக எடுத்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள பாப்பாக்குடி கிராமத்தில் மயானத்துக்கு செல்லும் சாலை மண் சாலையாக உள்ளது. மழை காலத்தில் இந்த வழியாக செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் யாராவது இறந்தால் கோடைக்காலம் தவிர மற்ற நேரங்களில் வயல் வழியாக எடுத்தும் உடலை செல்லும் நிலை உள்ளது.

தற்போது மயானத்துக்கு செல்லும் சாலை போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில், நடந்து கூட செல்ல முடியாத அளவில் மோசமாக இருந்து வருகிறது.

இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். மயானத்துக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் அவரது உடலை பாடையில் வைத்து உறவினர்கள், சம்பா நடவு செய்யப்பட்ட வயல் வழியாக மயானத்திற்கு எடுத்து சென்றனர்.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த அவலநிலை பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே மயானத்திற்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தி தர உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Next Story