கும்கிகளை நிறுத்தியும் பயன் இல்லை: காட்டு யானைகள் அட்டகாசத்தால் விவசாயிகள் கடும் அவதி - அகழியை ஆழப்படுத்த கோரிக்கை


கும்கிகளை நிறுத்தியும் பயன் இல்லை: காட்டு யானைகள் அட்டகாசத்தால் விவசாயிகள் கடும் அவதி - அகழியை ஆழப்படுத்த கோரிக்கை
x
தினத்தந்தி 13 Dec 2018 10:15 PM GMT (Updated: 13 Dec 2018 10:12 PM GMT)

கும்கிகளை நிறுத்தியும் பயன் இல்லாததால் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். அகழியை உடனடியாக ஆழப்படுத்த அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

துடியலூர், 

கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள பொன்னூத்துமலை, அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் மலைப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. அத்துடன் தற்போது இடப் பெயர்ச்சி காலம் என்பதால் இடம் பெயர்ந்து செல்லும் காட்டு யானைகளும் அந்த பகுதியில் முகாமிட்டு உள்ளன.

அந்த வகையில் கணுவாய், தடாகம், பொன்னூத்துமலை ஆகிய பகுதிகளில் மட்டும் 30-க்கும் மேற் பட்ட காட்டு யானைகள் வன எல்லையில் இருப்பதாக கூறப்படுகிறது. அங்குதான் விநாயகன் மற்றும் சின்னதம்பி என்ற காட்டு யானைகளும் உள்ளன. இந்த காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்ட காசம் செய்து வருகின்றன.

இந்த காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க முதுமலையில் இருந்து பொம்மன், விஜய், வசீம் ஆகிய கும்கி யானைகளும், சாடிவயலில் இருந்து சேரன் என்ற கும்கி யானையும் வரவழைக்கப்பட்டன. தற்போது அந்த கும்கிகள் அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோவில் அருகே வனப்பகுதி அடிவாரத்தில் நிறுத்தப்பட்டு உள்ளன.

எனினும் காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க முடியவில்லை. கும்கிகள் ஒருபுறம் இருந்தால் மறுபுறத்தில் காட்டு யானைகள் புகுந்துவிடுகிறது. நேற்று நள்ளிரவு 2 மணியளவில் பொன்னூத்துமலை பகுதியில் இருந்து 3 காட்டு யானைகள் வெளியே வந்தன.

பின்னர் அந்த யானைகள் வரப்பாளையத்தை சேர்ந்த வெள்ளியங்கிரி, மோகனா, நஞ்சப்பன் ஆகிய விவசாயிகளின் தோட்டங்களில் புகுந்து வாழைகள் மற்றும் சோளப்பயிரை தின்றும், மிதித்தும் நாசம் செய்தன. அத்துடன் வெள்ளியங்கிரி வீட்டின் முன்பு சென்ற யானைகள் அந்த வீட்டின் ஓட்டை உடைத்தது.

பின்னர் அதன் வழியாக துதிக்கைகளை விட்டு தவிடு, புண்ணாக்கு மூட்டைகளை எடுத்து தின்று அட்டகாசத்தில் ஈடுபட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பட்டாசு வெடித்து அந்த யானைகளை வனப்பகுதிக்குள் துரத்தினார்கள்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வருவதை தடுக்க 4 கும்கி யானைகளை நிறுத்தி உள்ளனர். ஆனாலும் கும்கிகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு காட்டு யானைகள் வேறு வழியாக வனப்பகுதியை விட்டு ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் கும்கிகளை நிறுத்தியும் பயன் இல்லாததால் நாங்கள் தினமும் அவதியடைந்து வருகிறோம்.

மலையடிவார பகுதியில் வெட்டப்பட்ட அகழி ஆழமாக இருந்தால் காட்டு யானைகள் ஊருக்குள் வர வாய்ப்பு இல்லை. அதை ஆழப்படுத்தினால் எங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படாது. ஆனால் அதை வனத்துறையினர் செய்யாமல் காட்டு யானைகளை துரத்துகிறோம் என்ற பெயரில் கும்கிகளை நிறுத்தி அரசு பணத்தை வீண் செய்து வருகிறார்கள்.

அட்டகாசம் செய்யும் சின்னதம்பி, விநாயகன் காட்டு யானைகளை பிடிக்க வனத்துறைக்கு பரிசீலனை செய்யும் மாவட்ட நிர்வாகம், நிரந்தர தீர்வு காண அகழியை ஆழப்படுத்த பரிசீலனை செய்வது இல்லை. எனவே காட்டு யானைகளின் அட்டகாசத்துக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கோவை வனக்கோட்டத்துக்குட்பட்ட பகுதியில் மலையடிவாரத்தில் வெட்டப்பட்ட அகழியை போர்க்கால அடிப்படையில் ஆழப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story