கூடலூர் வரும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை துன்புறுத்தக்கூடாது - வனத்துறையினர் எச்சரிக்கை


கூடலூர் வரும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை துன்புறுத்தக்கூடாது - வனத்துறையினர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 14 Dec 2018 3:45 AM IST (Updated: 14 Dec 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் வரும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை துன்புறுத்தக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கூடலூர், 

கூடலூர், முதுமலை பகுதியில் காட்டு யானை, புலி, காட்டெருமை, சிறுத்தைப்புலி, மான், செந்நாய் என வனவிலங்குகள் அதிகளவு வசித்து வருகிறது. இந்த நிலையில் கூடலூர் பகுதியில் பருவ மழைக்காலம் முடிந்து விட்டது. இதைத்தொடர்ந்து கடும் பனிப் பொழிவு காணப்படுகிறது.

இதனால் வனத்தில் உள்ள புற்கள் பனியில் கருகி வருகிறது. மேலும் பகலில் நன்கு வெயிலும் காணப்படுகிறது. இதனால் வறட்சியான கால நிலை தொடங்கி உள்ளது. வழக்கமாக மழைக்காலத்தில் பசும்புற்கள் அதிகளவு இருந்ததால் காட்டுயானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு தேவையான பசுந்தீவனம் கிடைத்து வந்தது.

ஆனால் தற்போது நிலைமை மாறி விட்டது. இதனால் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காக வனவிலங்குகள் அதிகளவு வனத்தை விட்டு ஊருக்குள் புகுந்து விடுகின்றன. மேலும் முதுமலை சாலையோரம் காட்டு யானைகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.

ஆனால் மைசூரில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மசினகுடி வழியாக செல்லும் சாலையோரம் காட்டு யானைகள் எந்த நேரமும் நிற்கிறது. இதனால் சாலைகளில் செல்லும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி வனவிலங்குகளை துன்புறுத்து கிறார்கள்.

சமவெளி பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் காட்டு யானைகளால் ஆபத்து ஏற்படும் என்பதை அறிவது இல்லை. இது குறித்து வனத்துறையினர் தரப்பில் கூறியதாவது:-

சாலையில் வாகனங்களில் செல்லும் போது வனவிலங்குகளை காண்பது தவறு அல்ல. ஆனால் வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்யக்கூடாது. ஏனெனில் வனவிலங்குகள் திடீரென தாக்கும் தன்மை உடையவை. இதை சுற்றுலா பயணிகள் அறிவது இல்லை.

இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வனவிலங்குகளை துன்புறுத்தும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. எனவே சுற்றுலா பயணிகள் தங்களின் பாதுகாப்பை உணர்ந்து வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறிஉள்ளனர்.

Next Story