தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி மாணவ –மாணவிகளின் கலாசார நடன அணி வகுப்பு


தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி மாணவ –மாணவிகளின் கலாசார நடன அணி வகுப்பு
x
தினத்தந்தி 13 Dec 2018 10:51 PM GMT (Updated: 13 Dec 2018 10:51 PM GMT)

தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ–மாணவிகளின் கலாசார நடன அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

காரைக்குடி,

தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் தேசிய அளவில் கல்லூரி மாணவர்களுக்கான நாட்டுநலப்பணித்திட்ட முகாம் காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம், குஜராத், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 250–க்கும் மேற்பட்ட நாட்டுநலத்திட்டப்பணி மாணவ–மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதன் தொடக்க விழா காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரியில் கல்லூரி முதல்வர் இளங்கோ தலைமை தலைமையில் நடைபெற்றது. விழாவில் நாட்டுநலத்திட்டப்பணி மண்டல ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் செல்லையா, துணை முதல்வர் கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடக்க விழாவில் தேசிய ஒருமைப்பாட்டை விளக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களில் உள்ள பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை அந்தந்த மாணவ–மாணவிகள் செய்து காட்டினர்.

இந்த முகாம் சார்பில் காரைக்குடி ராஜீவ்காந்தி சிலை அருகில் இருந்து பல்வேறு மாநில மாணவ–மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் இளங்கோ தலைமை தாங்கினார். தேவிவைரவன் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் தமிழக மாணவ–மாணவிகள் சார்பில் கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளும், அசாம் மாநில மாணவ–மாணவிகள் சார்பில் பிகு டான்ஸ் நடனமும், கேரள மாணவ–மாணவிகள் சார்பில் கதகளி மற்றும் குச்சுப்பிடி நடனம், மகாராஷ்டிரா மாணவ–மாணவிகளின் லாவணி நடனம் உள்ளிட்ட பல்வேறு நடனங்கள் நடைபெற்றன.

இந்த ஊர்வலம் காரைக்குடி நீதிமன்றம், புதிய பஸ்நிலையம், நூறடிச்சாலை, பெரியார்சிலை வழியாக பாண்டியன் திடலில் நிறைவு பெற்றது. பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த மாணவ–மாணவிகளின் ஊர்வலம் மற்றும் அவர்களின் கலாசார நடனத்தை ஏராளமான மக்கள் பார்த்து ரசித்தனர். இதையொட்டி காரைக்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story