திருவாடானை தாலுகாவில் விலைக்கு தண்ணீர் வாங்கி வயல்களுக்கு பாய்ச்சும் விவசாயிகள்


திருவாடானை தாலுகாவில் விலைக்கு தண்ணீர் வாங்கி வயல்களுக்கு பாய்ச்சும் விவசாயிகள்
x
தினத்தந்தி 14 Dec 2018 4:22 AM IST (Updated: 14 Dec 2018 4:22 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை தாலுகாவில் விலைக்கு தண்ணீர் வாங்கி விவசாயிகள் வயல்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்.

தொண்டி,

திருவாடானை தாலுகாவில் இந்த ஆண்டு 26,547 எக்டேர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி நடைபெற்றுஉள்ளது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளை போல் இந்த ஆண்டும் பருவமழை பொய்த்து விட்டதுடன் போதிய மழையும் பெய்யவில்லை. இதனால் இந்த தாலுகாவில் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுஉள்ளது. பெரும்பாலான கிராமங்களில் மருந்துகளை தெளித்து விட்டு, களை எடுக்கும் பணிகள் முடிவுற்ற நேரத்தில் அடுத்த கட்டமாக உரம் போடுவதற்கு விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால் புயல் வந்த நேரத்தில் அதிக மழை பெய்யும் நெல் விவசாயத்தை பாதுகாத்து விடலாம் என விவசாயிகள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். ஆனால் புயலாலும் மழை கிடைக்கவில்லை. இந்த நிலையில் மங்கலக்குடி பகுதியில் தற்போது நெற்பயிர் கதிர் விட தொடங்கிஉள்ளது. இந்த நேரத்தில் தண்ணீர் இல்லாவிட்டால் நெற்பயிர்கள் செழித்து வளர முடியாது என கருதிய இப்பகுதி விவசாயிகள் தற்போது டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து வயலுக்கு பாய்ச்சி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் அரசத்தூரை சேர்ந்த வீரபத்திரன், மங்கலக்குடி சம்பூருணி சேவுகன் ஆகியோர் கூறியதாவது:– மங்கலக்குடி பிர்க்காவில் ஒரு ஆண்டு முழுமையாக விளைச்சல் கிடைத்தால் மாவட்டத்திற்கு 3 ஆண்டுகளுக்கு தேவையான உணவு தானியம் சேமிப்பு கிடங்கில் வைக்கமுடியும். இந்த மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படுவது மங்கலக்குடி பிர்க்காவை தான். ஆனால் இந்த ஆண்டு நெற்பயிரை காப்பற்ற இப்பகுதி விவசாயிகள் போராடி வருகிறோம்.

இதனால் கடன் வாங்கியாவது விவசாயத்தை காப்பற்ற வேண்டும் என இரவு பகலாக ஒரு டேங்கர் லாரி தண்ணீர் ரூ.1,200–க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.

இதன் மூலம் ஏக்கருக்கு சுமார் 40 டேங்கர் லாரி தண்ணீர் தேவைப்படுகிறது. தற்போது நெற்பயிர் பொதி கட்டும் நேரம் என்பதால் முடிந்தவரை தண்ணீரை பாய்ச்சி விதைக்காவது நெல் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் தான் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். பயிர்கள் கருகிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் ஒரு மழை பெய்தால் இப்பகுதியில் ஓரளவு விவசாயம் காப்பாற்றப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். ஆனால் இந்த தாலுகாவில் உள்ள மற்ற பகுதிகளில் இனிமேல் மழை பெய்தாலும் பயனளிக்காது என புலம்பும் விவசாயிகள் தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள ஆர்வம் இல்லாமல் நெல்வயல்களில் ஆடு, மாடுகளை மேயவிட்டு விட்டுள்ளனர்.


Next Story