ரூ.1¼ கோடியில் புதிய கட்டிடங்கள்; அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்


ரூ.1¼ கோடியில் புதிய கட்டிடங்கள்; அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 14 Dec 2018 4:29 AM IST (Updated: 14 Dec 2018 4:29 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் ரூ.1¼ கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.1 கோடியே 28 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்வேறு புதிய கட்டிடங்களை கலெக்டர் சிவஞானம் தலைமையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா முன்னிலை வகித்தார். ராஜபாளையம் ஒன்றியம், திருவள்ளுவர் நகரில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சிக் கூடம், அச்சம்தவிழ்த்தான் மற்றும் அச்சங்குளம் கிராமங்களில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தலா ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்களையும், விழுப்பனூரில் ரூ.8.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்பாடி மையம், வத்திராயிருப்பு ஒன்றியம் மகாராஜபுரத்தில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு உள்ள அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

உடற்பயிற்சி கூடங்களை திறந்து வைத்த அமைச்சர் அங்கு சிறிது நேரம் உடற்பயிற்சி செய்தார். அப்போது அம்மா பூங்கா சிறியவர்களுக்கு விளையாட்டு மைதானமாகவும், நடுத்தர வயதினருக்கு உடற்பயிற்சிக் கூடமாகவும், பெரியவர்களுக்கு நடைபயிற்சி மைதானமாகவும் பல பரிணாமங்களில் பயன்படும் என்று கூறினார். இந்த உடற்பயிற்சி கூடங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பேணி காக்கும் இலவச உடற்பயிற்சி தளமாகவும் செயல்படும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், செயற்பொறியாளர் ஹசன் இப்ராகிம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, பிரின்ஸ், செல்வராஜ் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story