என்.எல்.சி. 3-வது நிலக்கரி சுரங்கத்துக்கு: நிலம் கையகப்படுத்தினால் அனைத்து கட்சியினரை திரட்டி போராட்டம் - எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி
நெய்வேலியில் என்.எல்.சி. 3-வது நிலக்கரி சுரங்கத்துக்கு நிலம் கையகப்படுத்தினால் அனைத்து கட்சியினரையும் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கடலூர்,
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், குறிஞ்சிப்பாடி எம்.எல்.ஏ.வுமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், புவனகிரி எம்.எல்.ஏ. துரை.கி.சரவணன் ஆகியோர் நேற்று மாவட்ட கலெக்டர் அன்புசெல்வனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் 3-ம் சுரங்க பணிகளுக்கு புவனகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கம்மாபுரம், புவனகிரி ஒன்றிய பகுதிகளில் நிலம் கையகப்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆகவே என்.எல்.சி. இந்தியா நிறுவனம், 3-ம் சுரங்க பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தக்கூடாது. இதை பொதுமக்கள், விவசாயிகள் நலன் கருதி கைவிட வேண்டும். என்.எல்.சி.க்கு ஏற்கனவே நிலம், வீடு கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இறந்த வாரிசுகளுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும். என்.எல்.சி. சுரங்கம் அருகே உள்ள ஓம்சக்திநகர், ஆட்டோ கேட், ஒர்க்ஷாப்கேட், தாண்டவன்குப்பம் ஆகிய பகுதிகளில் காலி செய்யப்படும் வீடுகளுக்கு பதிலாக மாற்று இடம் வழங்க வேண்டும். 2-ம் சுரங்கம் வழியாக ஊ.மங்கலம், ஊத்தாங்கல், கொம்பாடிக்குப்பம், ஊ.கொளப்பாக்கம், சு.கீணணூர், கம்மாபுரம் வரை தண்ணீர் சென்ற வாய்க்கால் தூர்ந்து கிடக்கிறது. இதை தூர்வார வேண்டும்.
2-ம் சுரங்கத்தால் மண் சரிந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். கருங்குழியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். தீர்த்தனகிரி, தம்பிப்பேட்டை, குண்டியமல்லூர், பெத்தனாங்குப்பம், அணுக்கம்பட்டு ஆகிய ஊராட்சிகளில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
அப்போது கடலூர் நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், மதியழகன், ராயர், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், மாவட்ட துணை செயலாளர் ஞானமுத்து, நகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
கலெக்டரிடம் மனு கொடுத்த பிறகு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், என்.எல்.சி. இந்தியா நிறுவனம் 3-ம் சுரங்க பணிகளுக்கு புவனகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களை கையகப்படுத்த உள்ளது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஆகவே இதையும் மீறி நிலம் கையகப்படுத்தினால் அனைத்துக்கட்சிகள், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றார்.
Related Tags :
Next Story