விருத்தாசலம், காட்டுமன்னார்கோவிலில்: கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம், காட்டுமன்னார்கோவிலில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், உட்பிரிவு பட்டா மாற்றத்தில் கிராம நிர்வாக அலுவலர்களையும் அனுமதிக்க வேண்டும், கூடுதல் பொறுப்பாக கவனிக்கும் கிராமங்களுக்கும் சேர்த்து கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும், ஒரே உத்தரவில் மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும், நிர்வாக அலுவலர்களுக்கு கணினி வசதி மற்றும் இணையதள வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலக கட்டிடங்களுக்கு குடிநீர், மின்சார வசதி செய்து தரவேண்டும், கிராம நிர்வாக அலுவலர்கள் பதவியை மீண்டும் தொழில்நுட்ப பதவியாக அறிவிக்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமத்திலேயே தங்க வேண்டும் என்ற உத்தரவை மாற்றியமைக்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்கள் கல்வித்தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் சசிகலா, கோவிந்தராஜ், அய்யப்பன், அன்புமணி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.
இதேபோல் கிராம நிர்வாக அலுவலர் சங்கம் காட்டுமன்னார்கோவில் வட்டக்கிளை சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ரபி, வட்ட செயலாளர் எழிலரசன், பொருளாளர் உதயகுமார், செய்தி தொடர்பு செயலாளர் சோபு, குறுவட்ட செயலாளர் சித்ரா, வட்ட துணை செயலாளர் கலியமூர்த்தி, ரத்னசேகர் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story