மேலூர் அருகே கீழையூரில் கூட்டுறவு வங்கியின் புதிய கிளை; அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்


மேலூர் அருகே கீழையூரில் கூட்டுறவு வங்கியின் புதிய கிளை; அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 13 Dec 2018 11:11 PM GMT (Updated: 13 Dec 2018 11:11 PM GMT)

மேலூர் தாலுகா கீழையூரில் கூட்டுறவு வங்கி புதிய கிளையை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.

மதுரை,

மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா, கீழையூரில் மத்திய கூட்டுறவு வங்கியின் 44-வது கிளை திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு வங்கி கிளையை திறந்து வைத்தார். பின்னர் அவர் 335 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 61 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயிகளின் நலனுக்காக மத்திய கூட்டுறவு வங்கியின் கீழையூர் கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மாநில அளவில் ரூ.8 ஆயிரம் கோடி வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட வேண்டும் என குறியீடு நிர்ணயிக்கப்பட்டு, அதில் இதுவரை 6 லட்சத்து 55 ஆயிரத்து 99 விவசாயிகளுக்கு ரூ.4 ஆயிரத்து 518 கோடி வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திற்கு ரூ.160 கோடி அளவிற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் ரூ.75 கோடி வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மதுரை மற்றும் தேனி மாவட்டத்தினை முழுமையாக செயல் எல்லையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கீழையூர் கிளை மூலமாக கீழையூர், கீழவளவு, கொங்கம்பட்டி, சருகுவலையப்பட்டி, தனியாமங்கலம், நாவினிப்பட்டி, தும்பைப்பட்டி, பூதமங்கலம் மற்றும் எட்டிமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ள 16 கிராம பொதுமக்கள் பயன் அடைவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story