மாடியில் இருந்து தவறி விழுந்து: தனியார் மெட்ரிக் பள்ளி முதல்வர் சாவு


மாடியில் இருந்து தவறி விழுந்து: தனியார் மெட்ரிக் பள்ளி முதல்வர் சாவு
x
தினத்தந்தி 14 Dec 2018 3:45 AM IST (Updated: 14 Dec 2018 4:45 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து தனியார் மெட்ரிக் பள்ளி முதல்வர் பரிதாபமாக இறந்தார்.

சேலம்,

சேலம் மெய்யனூர் அருகே உள்ள ராம்நகரை சோந்தவர் ஆசைத்தம்பி (வயது 36). இவர் சிவதாபுரத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி கமலாதேவி அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் ஆசைத்தம்பி மெய்யனூர் அர்த்தனாரி கவுண்டர் தெருவில் வேறு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தார். அங்கு குடியேறுவதற்காக நேற்று முன்தினம் இரவு பொருட்களை எடுத்துக்கொண்டு புதிதாக வாடகைக்கு எடுத்து வீட்டிற்கு கொண்டு சென்றார். நள்ளிரவு வரை அவர் அந்த பணியில் ஈடுபட்டு உள்ளார்.

பின்னர் புதிய வீட்டின் மொட்டை மாடிக்கு தூங்க சென்றார். இவரது மனைவி கமலாதேவி மற்றும் உறவினர்கள் வீட்டுக்கு தூங்கினர். இந்த நிலையில் ஆசைத்தம்பி நள்ளிரவு மொட்டை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாமாக இறந்தார். நள்ளிரவு என்பதால் விபத்து நடந்தது யாருக்கும் தெரியவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து வெளியில் வந்த அவரது மனைவி கமலாதேவி, கணவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு கதறி அழுதார். இது பற்றி தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆசைத்தம்பியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், தூங்கிக்கொண்டிருந்த ஆசைத்தம்பிக்கு நள்ளிரவு திடீரென்று வாந்தி வந்து உள்ளது. அப்போது வாந்தி எடுத்துக்கொண்டிருந்த அவர் நிலை தடுமாறி மொட்டை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்தது தெரிய வந்தது. 

Next Story