‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ்: சேலத்தில் ரூ.92.13 கோடியில் ஈரடுக்கு நவீன பஸ் நிலையம் - எடப்பாடி பழனிசாமி பணியை தொடங்கி வைத்தார்


‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ்: சேலத்தில் ரூ.92.13 கோடியில் ஈரடுக்கு நவீன பஸ் நிலையம் - எடப்பாடி பழனிசாமி பணியை தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 14 Dec 2018 5:00 AM IST (Updated: 14 Dec 2018 4:45 AM IST)
t-max-icont-min-icon

‘ஸ்மார்ட் சிட்டி‘ திட்டத்தின் கீழ் சேலத்தில் ரூ.92.13 கோடியில் ஈரடுக்கு நவீன பஸ் நிலையம் அமைக்கும் பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

சேலம், 


சேலம் மாநகராட்சி பகுதியில் சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் சேலம் பழைய பஸ்நிலையத்தை நவீன வசதிகளுடன் ஈரடுக்கு பஸ் நிலையமாக மாற்றி அமைக்க ரூ.92.13 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஈரடுக்கு நவீன பஸ் நிலைய பணிகள் மட்டுமின்றி ரூ.166.52 கோடியில் பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகள் தொடக்க விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் பழைய பஸ்நிலையத்தில் நேற்று மாலை நடந்தது.

விழாவுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ரோகிணி வரவேற்றார். விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ள புதிய திட்டப்பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாநகரம் என்றாலே மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த ராசியான நகரமாகும். அவரது முயற்சியால் சேலத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ரூ.320 கோடியில் 5 ரோடு, 4 ரோடு, சாரதா கல்லூரி சாலை உள்ளிட்ட இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், திருவாக்கவுண்டனூர், ஏ.வி.ஆர்.ரவுண்டானா, குரங்குச்சாவடி பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் 3 இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டிமுடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் மாநகரமாக சேலம் உள்ளதால், இங்கு சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம். கந்தம்பட்டி மற்றும் அரியானூர், மகுடஞ்சாவடி பகுதிகளில் அடிக்கடி விபத்து நடப்பதால் அதை குறைப்பதற்கு அந்த பகுதிகளிலும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். சாலை விபத்துகளில் நடக்கும் உயிர் சேதங்களை தவிர்க்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் எந்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டதோ? அதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் பணி தொடங்கப்படாமல் ஜவ்வாக இழுத்துச்செல்கிறது. ஏதோ சேலத்துக்கு மட்டும் சாலைகள் போடப்படுவதாக சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். சேலம்-சென்னை 8 வழிச்சாலை அமைந்தால் சேலம் மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கும், ஈரோடு, கோவை, திருப்பூரில் இருந்து சென்னை செல்லும் மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 70 கிலோ மீட்டர் தூரம் குறையும். டீசல் உள்ளிட்ட எரிபொருள் மிச்சமாகும். பயண தூரம் குறையும். விபத்து ஏற்படாமல் சர்வதேச தரத்தில் சாலை அமைக்கப்படும்.

நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு சிறப்பு இழப்பீடு வழங்கப்படுகிறது. ஒரு ஊரோ? ஒரு மாநிலமோ? வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது அவசியம். அவ்வாறு செய்தால் பொருளாதாரம் மேம்படும். நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. அதாவது ஆண்டுக்கு 17 லட்சம் வாகனங்கள் புதிதாக வருகின்றன. எனவே, 8 வழிச்சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைவரும் முழுஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் உள்ளாட்சி துறை மூலம் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த துறை மட்டுமின்றி எந்த துறையிலும் நான் தலையிடுவது இல்லை. இதனால் அமைச்சர்கள் சுதந்திரமாக செயல்பட்டு, மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கஜா புயலால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அந்த மாவட்டங்களில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதாவது 2 லட்சத்து 21 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்து உடைந்துவிட்டன. அவற்றை சீரமைக்கும் பணிகளில் சுமார் 26 ஆயிரம் மின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 75 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள 25 சதவீத பணிகளும் விரைவில் முடிந்துவிடும்.

ஆனால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகள் சரிவர நடைபெறவில்லை என்று எதிர்க்கட்சியினர் குறைகூறி வருகிறார்கள். எவ்வாறு செயல்படுவது? என்று சொல்லுங்கள். அதன்படி நாங்கள் செயல்படுகிறோம். இதுவரை இல்லாத வகையில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எப்படி கஜா புயல் வீசியதோ? அதே வேகத்தில் ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் அர்ப்பணிப்பு உணர்வோடு நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு இந்த தருணத்தில் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

சேலம் மாநகரில் 2011-ம் ஆண்டுக்கு முன்பு தி.மு.க.ஆட்சியில் எந்தெந்த பணிகள் நடைபெற்றது. அதன்பிறகு வந்த அ.தி.மு.க.ஆட்சியில் இதுவரை எத்தனை பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சேலம் மாவட்ட மக்களின் வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா வழியில் நடக்கும் தமிழக அரசு நிறைவேற்றி கொடுக்கும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மேலும் பல்வேறு துறைகள் மூலமாக 3 ஆயிரத்து 37 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், நுண் உயிரி உரம் தயாரிக்கும் மையம், கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், பாதாள சாக்கடை திட்டம் மற்றும் தனிக்குடிநீர் திட்டம் முடிவுற்ற பகுதிகளில் சாலைகளை மறு சீரமைக்கும் பணிகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

விழாவில் நகராட்சி நிர்வாக ஆணையாளர் பிரகாஷ், பன்னீர்செல்வம் எம்.பி., சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, வெங்கடாசலம், ராஜா, வெற்றிவேல், மனோன்மணி, சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.பொருளாளர் பங்க் வெங்கடாசலம், துணை செயலாளர் பாலு, மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் ஜான்கென்னடி, கூட்டுறவு சங்க தலைவர்கள் எம்.துரைராஜ், கே.சி.செல்வராஜ், ராம்ராஜ், சுந்தரபாண்டியன், கர்ணன், சேலம் ஒன்றிய செயலாளர் டி.என்.வையாபுரி, சூரமங்கலம் பகுதி ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஜங்சன் பாவா, மாமாங்கம் செங்கோட்டையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story