8-வது மாடியில் இருந்து குதித்து முதுகலை பட்டப்படிப்பு மாணவர் தற்கொலை
8-வது மாடியில் இருந்து குதித்து முதுகலை பட்டப்படிப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
மும்பை தேவ்னாரில் உள்ள டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தவர் சங்கீத் தாம்பே(வயது24). இவா் பவாயில் உள்ள காஸ்மோபாலிட்டன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். சம்பவத்தன்று அதிகாலை 3 மணியளவில் சங்கீத் தாம்பே கட்டிட வளாகத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்து சென்ற போலீசார் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், மாணவர் கட்டிடத்தின் 8-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இந்தநிலையில் போலீசார் மாணவரின் அறையில் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், தனது சாவிற்கு கல்லூரி பேராசிரியர் பி.விஜயகுமார் தான் காரணம் என மாணவர் குறிப்பிட்டு இருந்தார். சங்கீத் தாம்பேவை சமீபத்தில் பேராசிரியர் விஜயகுமார் வகுப்பறையில் வைத்து மற்ற மாணவர்கள் முன் அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்து உள்ளார்.
இதையடுத்து போலீசார் மாணவரை தற்கொலைக்கு தூண்டியதாக போராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். தற்கொலை செய்த மாணவர் சங்கீத் தாபேயின் தந்தை மாஜிஸ்திரேட்டாகவும், தாய் டாக்டராகவும் உள்ளனர்.