வடலா-ஜேக்கப் சர்க்கிள் இடையே குடியரசு தினத்தில் மோனோ ரெயில் சேவை தொடக்கம்


வடலா-ஜேக்கப் சர்க்கிள் இடையே குடியரசு தினத்தில் மோனோ ரெயில் சேவை தொடக்கம்
x
தினத்தந்தி 14 Dec 2018 5:06 AM IST (Updated: 14 Dec 2018 5:06 AM IST)
t-max-icont-min-icon

வடலா- ஜேக்கப் சர்க்கிள் இடையே குடியரசு தினத்தன்று மோனோ ரெயில் சேவையை தொடங்க மும்பை பெருநகர வளர்ச்சிக்குழுமம் திட்டமிட்டு உள்ளது.

மும்பை, 

நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் தான் மோனோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக செம்பூர்- வடலா இடையே வழித்தடம் அமைக்கப்பட்டு மோனோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த மோனோ ரெயில் சேவை கடந்த ஆண்டு நவம்பரில் மோனோ ரெயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தை தொடர்ந்து, அடியோடு முடங்கியது. பின்னர் 10 மாதங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் மோனோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

வடலா- ஜேக்கப் சர்க்கிள் இடையிலான 2-வது கட்ட மோனோ ரெயில் வழித்தட பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. மோனோ ரெயிலை இயக்குவதற்கான அனுமதியும் கிடைத்துவிட்ட நிலையில், போதிய மோனோ ரெயில் இன்மை காரணமாக இன்னும் இந்த வழித்தடம் பயன்பாட்டுக்கு வராமல் இருக்கிறது.

இதுபற்றி மும்பை பெருநகர வளர்ச்சிக்குழும அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மொத்தம் உள்ள 10 மோனோ ரெயில்களில் 4 மட்டும் தான் பயன்பாட்டில் இருக்கிறது. மீதி 6 ரெயில்கள் பழுதுகள் காரணமாக இயக்கப்படாமல் இருக்கின்றன.

மோனோ ரெயில்களை இயக்கும் மலேசிய நிறுவனத்திடம் அந்த ரெயில்களில் உள்ள பழுதுகளை நீக்கும்படி கேட்டு இருக்கிறோம். ஜனவரி 26-ந்தேதி குடியரசு தினத்தன்று வடலா- ஜேக்கப் சர்க்கிள் இடையேயும் மோனோ ரெயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இரண்டாம் கட்ட மோனோ ரெயில் வழித்தடம் பயன்பாட்டுக்கு வரும் போது மும்பை மோனோ ரெயில் திட்ட வழித்தடம் முழு வடிவம் பெறும். செம்பூர்- ஜேக்கப் சர்க்கிள் இடையே பயணிகள் பயணிக்க முடியும்.

மேலும் தற்போது, சுமார் 12 ஆயிரமாக உள்ள மோனோ ரெயில் பயணிகளின் எண்ணிக்கை 1 லட்சமாக உயரும் என மும்பை பெருநகர வளர்ச்சிக்குழுமம் நம்புகிறது.


Next Story