5 மாநில தேர்தல் தோல்வி எதிரொலி : பா.ஜனதா தலைவர்கள் தங்கள் கட்சிகளில் சேர விருப்பம் எதிர்க்கட்சிகள் சொல்கின்றன
5 மாநில தேர்தலில் தோல்வியை அடுத்து பா.ஜனதா தலைவர்கள் தங்கள் கட்சிகளில் சேர விருப்பம் தெரிவித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.
மும்பை,
5 மாநில தேர்தல் முடிவுகளில் ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை பா.ஜனதாவிடம் இருந்து காங்கிரஸ் கைப்பற்றியது.
இந்த தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து பா.ஜனதா கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் தங்கள் கட்சியில் இணைய அணுகுவதாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தெரிவித்துள்ளது.
இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறியதாவது:-
பா.ஜனதா 3 மாநிலங்களில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து நாட்டில் சூழ்நிலை மிகப்பெரிய அளவில் மாற்றத்திற்குள்ளாகி இருக்கிறது. பா.ஜனதா 2019-ம் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறாது.
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது தேசியவாத காங்கிரஸ் மற்றும் சில கட்சிகளில் இருந்து வெளியேறி பா.ஜனதாவில் இணைந்த தலைவர்கள் கடந்த சில நாட்களாக எங்களை தொடர்புகொண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைய விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், “வரவிருக்கும் தேர்தல் ஆளும் பா.ஜனதா கட்சிக்கு கடும் சவாலாக இருக்கும். பா.ஜனதா தலைவர்கள் எதிர்க்கட்சிகளில் இணைய விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளுக்கும், வளர்ச்சி திட்டங்களுக்கும் ஆளும் அரசு செவி கெடுக்க மறுக்கிறது என்றும் குற்றம் சாட்டுகின்றனர்” என்றார்.
ஆனால் இதை பா.ஜனதா செய்தி தொடர்பாளர் கேசவ் உபாத்யாய் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், “தேர்தல் முடிவுக்கு பின் யாரும் எங்கள் கட்சியில் இருந்து விலகவில்லை. எங்கள் கட்சி கடந்த 4 ஆண்டுகளில் மராட்டியத்தில் நல்ல அடித்தளத்தை உருவாக்கி உள்ளது” என்றார்.