பெலகாவியில் சுவர்ணசவுதாவை முற்றுகையிட விவசாயிகள் முயற்சி


பெலகாவியில் சுவர்ணசவுதாவை முற்றுகையிட விவசாயிகள் முயற்சி
x
தினத்தந்தி 14 Dec 2018 5:38 AM IST (Updated: 14 Dec 2018 5:38 AM IST)
t-max-icont-min-icon

பெலகாவி சுவர்ணசவுதாவில் கர்நாடக குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.

பெங்களூரு, 

சர்க்கரை ஆலைகள் தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சுவர்ணசவுதா அருகே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இந்த நிலையில், நேற்றும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது அவர்கள் முதல்-மந்திரி குமாரசாமி வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் அவர் வரவில்லை. 

இதனால் கோபமடைந்த விவசாயிகள் கொண்டதாஸ்கொப்பா பகுதியில் இருந்து சுவர்ணசவுதாவை முற்றுகையிட சென்றனர். கொண்டதாஸ்கொப்பா கிராசில் விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு தள்ளு-முள்ளு நடந்தது. இருப்பினும், போலீசார் வைத்திருந்த தடுப்பு வேலிகளை தள்ளிவிட்டு சுவர்ணசவுதாவை நோக்கி விவசாயிகள் முன்னேறினர். 

இருப்பினும் போலீசார் விரைந்து சென்று விவசாயிகளை தடுத்து நிறுத்தி அங்கிருந்து அனுப்பினர். பின்னர், பெரிய மற்றும் சிறிய தொழில்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, அவர் ‘அனைத்து விவசாயிகளுக்கும் நிலுவை தொகையை வழங்க முதல்-மந்திரி குமாரசாமி, சர்க்கரை ஆலை உரிமையாளருக்கு உத்தரவிட்டுள்ளார். அவர்கள் ஜூன் மாதம் வரை காலக்கெடு கேட்டுள்ளனர். உங்களின் அனைத்து கோரிக்கைகளும் முறையாக நிறைவேற்றப்படும்’ என்று கூறினார்.

Next Story