எருதாட்டத்தில் பங்கேற்கும் : காளைகளை தயார்படுத்தும் காளையர்கள்


எருதாட்டத்தில் பங்கேற்கும் : காளைகளை தயார்படுத்தும் காளையர்கள்
x
தினத்தந்தி 14 Dec 2018 3:45 AM IST (Updated: 14 Dec 2018 5:50 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி, கொங்கணா புரத்தில் எருதாட்டத்திற்கு காளைகளை தயார்படுத்தும் பணியில் காளையர்கள் உற்சாகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

எடப்பாடி,

எடப்பாடி ஊராட்சி ஒன்றியம் வேம்பனேரி அய்யனாரப்பன் கோவில், தாதாபுரம் மாரியம்மன் கோவில், கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியம் புதுப்பாளையம் பெரிய மாரியம்மன், வெள்ளாளபுரம் மாரியம்மன் கோவில், முனியம்பட்டி மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் ஆண்டுதோறும் எருதாட்டம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

பொங்கல் பண்டிகைக்கு அடுத்து வரும் கரிநாள் அன்று அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எருதாட்டத்திற்கு என வளர்க்கப்படும் காளைகளை கோவிலுக்கு கூட்டி வந்து பொம்மை போல் உள்ள கம்பால் எருதின் முன் ஆட்டி எருதை கோவிலை சுற்றி வந்து அழைத்து செல்வார்கள். அவ்வாறு செய்தால் விவசாயம் செழிக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை ஆகும்.

இதற்காக ஒரு சிலர் தங்கள் வீடுகளில் தனியாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்தும் வருகின்றனர். காளைகளை தினமும் குளிப்பாட்டி அதற்காக புரதசத்து மிகுந்த மரவள்ளிக்கிழங்குடன் கலந்த உணவுகளை வழங்கி வளர்த்து வருகின்றனர்.

இதுகுறித்து புதுப்பாளையத்தை சேர்ந்த தங்கவேல் என்பவர் கூறியதாவது:-

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு முக்கியமானதாகும். எங்களிடம் 15-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் உள்ளன. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டில் எங்களது காளைகள் பங்குபெற்று பலவிதமான பரிசுகளை பெற்றுள்ளன. அதேபோல் நம் பகுதியில் எருதாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

எருதாட்டத்திற்காக தனியாக காளைகளை வளர்த்து வருவதுடன் அதற்காக மாதம் ஒரு தொகையை ஒதுக்கி பராமரித்து அதற்கு பயிற்சி கொடுத்து வருகிறோம். எருதாட்டம் நடத்தினால் தான் நம் பகுதியில் பொங்கல் விழா சிறப்பு பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடை நீங்கி உள்ள நிலையில், கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் வேம்பனேரி அய்யனாரப்பன் கோவில், தாதாபுரம் மாரியம்மன் கோவில், கொங்கணாபுரம் ஒன்றியம் புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவில், வெள்ளாளபுரம் மாரியம்மன் கோவில், முனியம்பட்டி மாரியம்மன் கோவில்களில் எருதாட்டம் நிகழ்ச்சி நடைபெறும்.

இதற்காக தற்போது காளைகளுக்கு பயிற்சி கொடுக்கவும், காளைகளை அலங்கரிக்கவும், கொம்புகளை சீவி வர்ணம் அடிக்கும் வேலையிலும் இளைஞர்கள் உற்சாகமாகவும் மகிழ்ச்சியுடனும் ஈடுபட்டுள்ளனர். காளைகளை தயார்படுத்தும் பணியில் காளையர்கள் உற்சாகமாக ஈடுபட்டு வருவதால் இந்த ஆண்டு எருதாட்டம் களை கட்டும் என்று இந்த பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Next Story