கர்நாடக அரசு சார்பில் சிக்பள்ளாப்பூரில் புதிதாக மருத்துவக்கல்லூரி


கர்நாடக அரசு சார்பில் சிக்பள்ளாப்பூரில் புதிதாக மருத்துவக்கல்லூரி
x
தினத்தந்தி 14 Dec 2018 6:02 AM IST (Updated: 14 Dec 2018 6:02 AM IST)
t-max-icont-min-icon

சிக்பள்ளாப்பூரில் புதிதாக மருத்துவக்கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெலகாவி, 

கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர் பசவராஜ் பொம்மை கேட்ட கேள்விக்கு மருத்துவ கல்வித்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பதிலளிக்கையில் கூறியதாவது:-

ஹாவேரியில் 250 படுக்கைகள் கொண்ட அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இன்னும் கூடுதலாக 50 படுக்கைகளை அமைக்க தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். புதிதாக ஒரு மருத்துவக்கல்லூரியை தொடங்க ரூ.610 கோடி நிதி தேவை.

இதற்கு முன்பு சிக்பள்ளாப்பூர், சிக்கமகளூரு, ஹாவேரி, பாகல்கோட்டை, யாதகிரி ஆகிய மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன. அந்த கல்லூரிகளை தொடங்க தேவையான நிதி ஒதுக்கப்படும். அந்த கல்லூரிகளை விரைவாக செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

கலபுரகியில் 38 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரி அமைக்கப்பட்டுள்ளது. 5 ஏக்கர் பரப்பளவில் 150 படுக்கைகள் கொண்ட ஒரு ஆஸ்பத்திரியை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

அப்போது சபாநாயகர் ரமேஷ்குமார் பேசும்போது, “மல்லிகார்ஜுன கார்கே மத்திய மந்திரியாக இருந்தபோது, தொழிலாளர் நலத்துறை சார்பில் பெரிய அளவில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆஸ்பத்திரியை நிர்வகிக்கும் பொறுப்பை மாநில அரசே எடுத்துக் கொள்வது நல்லது” என்றார்.

அதற்கு பதிலளித்த மந்திரி டி.கே.சிவக்குமார், “அந்த இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி கட்டிடம் மிகப்பெரியது. அதை நிர்வகிக்கும் பொறுப்பை மாநில அரசு ஏற்குமாறு மத்திய அரசு கூறியது. அதற்கு அதிக செலவாகும். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்றார்.

Next Story