மேகதாது அணை விவகாரம்: புதுச்சேரி அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் -முதலமைச்சர் நாராயணசாமி


மேகதாது அணை விவகாரம்: புதுச்சேரி அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் -முதலமைச்சர் நாராயணசாமி
x
தினத்தந்தி 14 Dec 2018 9:39 AM GMT (Updated: 14 Dec 2018 9:39 AM GMT)

மேகதாது அணை விவகாரத்தில், புதுச்சேரி அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுவை

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் சார்பில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடந்தது. அப்போது கர்நாடக அரசு திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு வழங்கிய அனுமதியை ரத்துசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதேபோல் தீர்மானம் நிறைவேற்ற புதுவை சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் வலியுறுத்தின. 

இதைத்தொடர்ந்து புதுவை சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று கூடும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று புதுவை  சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூடியது.

கூட்டத்தில் மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேகதாதுவில் அணை கட்ட பூர்வாங்க திட்ட அறிக்கை தயார் செய்ய தடையில்லா சான்றிதழ் வழங்கிய மத்திய நீர்வள ஆணையத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழை மத்திய நீர்வள ஆணையம் உடனடியாக திரும்பப்பெற உத்தரவிடக் கோரியும், கர்நாடக அரசு தொடர் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் தடை விதிக்கவும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நீராதார உரிமைகளை பாதுகாத்திட புதுவை அரசு நிர்வாக, சட்ட ரீதியாக எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு  எனவும்  தீர்மானம் நிறைவேற்றபட்டது.

புதுவை  முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-

மேகதாது அணை விவகாரத்தில், புதுவை அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். மேகதாது அணை கட்டுவதற்கு எதிராகவும், காவிரி ஆணையம் மற்றும் காவிரி நீர் வாரியத்திற்கு தனித்தனி தலைவரை நியமிக்க கோரியும் வழக்கு தொடரப்படும் என கூறினார்.

Next Story