வாணாபுரம் அருகே டாஸ்மாக் கடையை மூட எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம்
வாணாபுரம் அருகே டாஸ்மாக் கடையை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வாணாபுரம்,
தமிழகத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறந்தால் அந்த கடையினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது என்று கூறி அதனை உடனே மூட வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அதற்கு நேர்மாறாக திருவண்ணாமலை மாவட்டம், வாணாபுரம் அருகே இளையாங்கன்னியில் டாஸ்மாக் கடையை மூடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உள்பட பலர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:-
வாணாபுரம் அருகே உள்ள இளையாங்கன்னியில் தொண்டாமனூர் செல்லும் சாலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனை மூட வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று சேர்ந்து டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மண்எண்ணெய் கேனுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் 14 நாட்களுக்குள் டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் அதுவரை போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று கூறினர். இதனை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
போலீசார் கொடுத்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், அந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற டாஸ்மாக் நிர்வாகத்தினர் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் மதுபிரியர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து டாஸ்மாக் கடையை மூடக்கூடாது என்றும், அந்த கடையை இங்கேயே நடத்த வேண்டும் என்றும் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடை முன்பு பொதுமக்கள் போராட்டம் என்றதும் கடையை மூட வேண்டும் என்று தான் போராடுவார்கள் என்று போலீசார் நினைத்து கொண்டு அங்கு வந்தனர். ஆனால் டாஸ்மாக் கடையை மூடக்கூடாது என்று பொதுமக்கள் கோஷங்கள் எழுப்பியதை கண்டதும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த டாஸ்மாக் கடை வேண்டுமென்றால் நீங்கள் கலெக்டரிடம் மனுவாக கொடுக்க வேண்டும் என்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story