தர்மபுரி மாவட்டத்தில் ரூ.183 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்


தர்மபுரி மாவட்டத்தில் ரூ.183 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்
x
தினத்தந்தி 15 Dec 2018 4:30 AM IST (Updated: 14 Dec 2018 10:25 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் ரூ.183 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா நரிப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட பால்வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், உதவி கலெக்டர் புண்ணியகோட்டி, அரசு வக்கீல் பசுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் சந்தானம் வரவேற்று பேசினார்.

விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 117 விவசாயிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பிலான பல்வேறு கடன் திட்ட உதவிகளை வழங்கினார். செம்மறி ஆடு வளர்க்கும் திட்டத்தின் கீழ் 10 விவசாயிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சமும், கறவை மாடு வளர்க்கும் திட்டத்தின் கீழ் 60 விவசாயிகளுக்கு தலா ரூ.45 ஆயிரம் வீதம் ரூ.54 லட்சமும், விவசாய நகைக்கடனாக 47 விவசாயிகளுக்கு ரூ.65 லட்சத்து 66 ஆயிரமும் கடன் உதவியாக வழங்கப்பட்டது.

விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், தமிழ்நாட்டில் 2018–2019–ம் ஆண்டில் ரூ.8 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பயிர் கடனாக ரூ.183 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 25,836 விவசாயிகளுக்கு ரூ.148.23 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பெற்ற கடனை முறையாக திருப்பி செலுத்தி புதிய கடன்களை பெற்று பயனடைய வேண்டும் என்று கூறினார்.

விழாவில் கூட்டுறவு சங்க தலைவர்கள் பொன்னுவேல், கோவிந்தசாமி, வாசுகி சிற்றரசு, விஸ்வநாதன், சம்பத்குமார், ஆறுமுகம், மதிவாணன், செல்வராஜ், கிருஷ்ணமூர்த்தி, தாசில்தார் அன்பு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமரவேல், தண்டபாணி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டுறவு துணைப்பதிவாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.


Next Story