மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 116 பேருக்கு ரூ.23.67 லட்சம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் மலர்விழி வழங்கினார்


மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 116 பேருக்கு ரூ.23.67 லட்சம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் மலர்விழி வழங்கினார்
x
தினத்தந்தி 15 Dec 2018 4:15 AM IST (Updated: 14 Dec 2018 10:28 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் நடந்த மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 166 பேருக்கு ரூ.23 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மலர்விழி வழங்கினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் திரளாக கலந்து கொண்டு அரசு வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, பசுமை வீடு, இலவச வீட்டுமனைபட்டா, காதொலிக்கருவி, விலையில்லா தையல் எந்திரம், வங்கி கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். மொத்தம் 136 மாற்றுத்திறனாளிகள் பல்வேறு உதவிகள் கோரி விண்ணப்பங்கள் அளித்தனர்.

மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்று ஆய்வு நடத்திய கலெக்டர் மலர்விழி அந்த மனுக்கள் மீது விரைவான நடவடிக்கைகளை எடுக்கவும், உரிய தீர்வு காணவும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாற்றுத்திறனாளிகளின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்ற துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்தனர்.

இதையடுத்து 96 பேருக்கு காதொலி கருவிகள், 6 பேருக்கு ஊன்றுகோல், 2 பேருக்கு தையல் எந்திரம், ஒருவருக்கு பிரெய்லி கை கடிகாரம், மனவளர்ச்சி குன்றிய 11 பேருக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள் என மொத்தம் 116 பேருக்கு ரூ.23 லட்சத்து 67 ஆயிரத்து 280 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மலர்விழி வழங்கினார். இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story