தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் உள்ள 65 யானைகளை விரட்டும் பணி தீவிரம்


தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் உள்ள 65 யானைகளை விரட்டும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 15 Dec 2018 4:00 AM IST (Updated: 14 Dec 2018 10:38 PM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 65 காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தேன்கனிக்கோட்டை, 

கர்நாடக மாநிலம் பன்னார்கட்டாவில் இருந்து ஆண்டு தோறும் 200-க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வருவது வழக்கம். இவை பல குழுக்களாக பிரிந்து விவசாய பயிர்களை நாசம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளன.

வழக்கம் போல இந்த ஆண்டும் 200-க்கும் மேற்பட்ட யானைகள் வந்துள்ளன. இவை பல குழுக்களாக பிரிந்து சானமாவு, தேன்கனிக்கோட்டை, நொகனூர், போடூர்பள்ளம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் முகாமிட்டு அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 65 யானைகள் அருகே உள்ள சாப்ரானப்பள்ளி பகுதிக்கு சென்று விவசாய பயிர்களை சேதப்படுத்தின. இவற்றை பொதுமக்கள் கற்களை வீசி விரட்டினார்கள். தற்போது தேன்கனிக்கோட்டை அடுத்த மாரசந்திரம் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள இந்த யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதன்படி யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் யானைகளை வனத்துறையினர் விரட்டி வருகிறார்கள். விரைவில் யானைகள் பன்னார்கட்டா வனப்பகுதிக்கு விரட்டியடிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story