மாவட்டத்தில் 1,029 பயனாளிகளுக்கு திருமண நிதிஉதவியுடன் தாலிக்கு தங்கம் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா வழங்கினர்
நாமக்கல் மாவட்டத்தில் 1,029 பயனாளிகளுக்கு திருமண நிதிஉதவியுடன் தாலிக்கு தங்கத்தை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா வழங்கினர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலத்துறை சார்பில் ஏழை பெண்களுக்கு திருமண நிதிஉதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். நாமக்கல் எம்.பி. பி.ஆர்.சுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சப்-கலெக்டர் கிராந்தி குமார் வரவேற்றார்.
இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் 1,029 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 35 லட்சத்து 64 ஆயிரத்து 290 மதிப்பில் திருமண நிதிஉதவியுடன் தாலிக்கு தங்கத்தை வழங்கினர்.
அதேபோல் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ரூ.22 லட்சத்து 12 ஆயிரத்து 200 மதிப்பில் 389 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர். முன்னதாக நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு ரூ.2 லட்சத்து 94 ஆயிரத்து 200 மதிப்பீட்டில் ஸ்கூட்டர்களை அமைச்சர்கள் வழங்கினர்.
அதைத்தொடர்ந்து விழாவில் அமைச்சர் டாக்டர் சரோஜா பேசியதாவது:-
மகளிர் வாழ்வு மேம்பாட்டிற்காக அதிக அளவிலான திட்டங்களை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். திருமண நிதிஉதவியுடன் தாலிக்கு தங்கம் திட்டத்தில் 10½ லட்சம் பேர் பயனடைந்து உள்ளனர். இதனால் அதிக அளவில் பெண்கள் உயர்கல்வியில் ஆர்வம் காட்டுகின்றனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிந்தாமல் சிதறாமல் தகுதி உள்ள பயனாளிகளுக்கு அனைத்து திட்டங்களையும் வழங்கி வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் திருமண நிதிஉதவி வழங்கும் திட்டத்தில் இதுவரை ரூ.81 கோடி பணமாகவும், ரூ.26 கோடி தங்கமாகவும் மக்களை சென்றடைந்து உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் தற்போது திருமண நிதிஉதவியை பெற்ற 1,029 பேருடன் சேர்த்து 8 ஆண்டுகளில் 23 ஆயிரத்து 429 பேர் இந்த திட்டத்தில் பயன் பெற்று உள்ளனர். கர்ப்பிணிகள், பள்ளி மற்றும் கல்லூரி செல்பவர்கள் என அனைத்து நிலையிலும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். யார் எல்லாம் இதற்கு விண்ணப்பித்து உள்ளார்களோ அவர்கள் அனைவருக்கும் தாலிக்கு தங்கத்தை வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். எனவே இன்னும் சில நாட்களில் மேலும் 2 ஆயிரம் பேருக்கு திருமண நிதிஉதவி வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் தங்கமணி பேசினார்.
Related Tags :
Next Story