சேமூர் பெரிய ஏரியில் மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


சேமூர் பெரிய ஏரியில் மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 15 Dec 2018 4:00 AM IST (Updated: 14 Dec 2018 10:46 PM IST)
t-max-icont-min-icon

சேமூர் பெரிய ஏரியில் மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

வெண்ணந்தூர், 

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்த ஓ.சவுதாபுரம் பகுதிக்கு உட்பட்ட சேமூர் பெரிய ஏரி சுமார் 400 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கு சேலம் சேர்வராயன் மலைப்பகுதிகளில் இருந்து மணிமுத்தாறு வழியாக தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

இந்த ஏரி மூலம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயன் பெற்று வருகின்றன. பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இந்த ஏரியில் மீன் பிடி குத்தகை எடுப்பது சம்பந்தமாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்து வருவதால், மீன்பாசி குத்தகை உரிமம் யாருக்கும் இதுநாள் வரை வழங்கப்படவில்லை.


மேலும் இந்த ஏரியில் யாரும் சட்டவிரோதமாக மீன்களை பிடிக்கக்கூடாது என பொதுப்பணித் துறை மூலம் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் எச்சரிக்கையையும் மீறி நூற்றுக்கணக்கான பேர் மீன்களை பிடித்துச் செல்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- இந்த ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், யாரும் மீன்களை பிடிக்கக்கூடாது என்று எச்சரித்தும் யாரும் கேட்பதில்லை. ஏரி கேட்பாரற்று கிடப்பதால் சமூக விரோதிகள் பலரும் மீன்களை பிடித்து செல்கின்றனர். அதிலும் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக வலை போட்டு பலர் மீன் பிடித்து செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் இரவு நேரம் என்பதால் விஷப்பூச்சிகள் கடித்தும், பலர் நீரில் மூழ்கியும் இறக்கும் அபாயமும் உள்ளது.

ஏரியின் எல்லை பகுதிகளில், பொதுப்பணித் துறையினர் இந்த ஏரியில் யாரும் மீன்களை பிடிக்கக்கூடாது என்றும் அப்படி மீறி மீன் பிடிப்பவர்கள் மீது காவல்துறையால் தண்டிக்கப்படுவீர்கள் என்ற அறிவிப்பு பலகை வைத்தும் யாரும் இதனை கண்டு கொள்வது இல்லை.

எனவே இந்த ஏரியில் விரைந்து மீன் பிடிப்பதற்கான அனுமதி வழங்க வேண்டும். மேலும் அத்துமீறி மீன்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story