மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ரூ.500 கோடி முதலீடு இலக்கு அரசு முதன்மை செயலாளர் ராஜேந்திர குமார் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான முதலீடு ரூ.500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அரசு முதன்மை செயலாளர் ராஜேந்திரகுமார் கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான முதலீட்டாளர்கள் கூட்டம் நடத்துவதற்கான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தொழில் ஆணையர், தொழில் வணிக இயக்குநர் மற்றும் முதன்மை செயலாளர் ராஜேந்திர குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் தொடங்க முன்வந்துள்ள 12 தொழில் முனைவோர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
கூட்டத்தில் முதன்மைச் செயலர் பேசியதாவது:-
உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் ஐனவரி மாதம் 23, 24-ந் தேதிகளில் நடக்கிறது. இதையொட்டி மாவட்டம் தோறும் முதலீட்டாளர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த மாதம்(ஜனவரி) 5-ந் தேதி முதலீட்டாளர்கள் கூட்டம் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான முதலீடுகள் இலக்கு ரூ.500 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுவரை ரூ.360 கோடி இலக்கு எட்டப்பட்டு உள்ளது. இந்த மாத இறுதிக்குள் ரூ.140 கோடி இலக்கை எட்டுவதற்கு தொழில் முனைவோர்கள் முன்வர வேண்டும். சிறு குறு, நடுத்தர தொழில் தொடங்குவதற்கு மாவட்ட தொழில் மையம் மூலம் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. தொழில் துறையின் திட்டங்கள் அனைத்தும் இணையதளம் மூலம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் குறு மற்றும் சிறு தொழில் களின் மானிய உதவி திட்டங்கள், ஆற்றல் சேமிப்பு மற்றும் ஆற்றல் தணிக்கைக்கான மானிய திட்டம் ஆகியவற்றுக்கான இணையதளத்தை இந்த மாத இறுதியில் முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான அனுமதிகள், உரிமைகள் 11 துறைகளிடம் இருந்து பெறுவதற்கான ஒற்றை சாளர முறையிலான இனையதளம் செயல்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் அதிகமான தொழில்களை தொடங்க தொழில் முதலீட்டாளர்கள் முன் வர வேண்டும். அதற்கு தேவையான உதவிகள் அரசின் மூலம் செய்து தரப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் உதவி கலெக்டர் சிம்ரான்ஜித் சிங் கலோன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கண்ணன், திட்ட மேலாளர் சொர்ணலதா, அகில இந்திய தொழில் கூட்டமைப்பு துணைத்தலைவர் கிருஷ்ணசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story