நெல்லை அருகே பஞ்சாயத்து அலுவலகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்


நெல்லை அருகே பஞ்சாயத்து அலுவலகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 15 Dec 2018 4:30 AM IST (Updated: 14 Dec 2018 11:57 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே பஞ்சாயத்து அலுவலகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

நெல்லை, 

நெல்லை மாநகராட்சி சார்பில் ராமையன்பட்டியில் குப்பை கிடங்கு மற்றும் பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. இங்கு பாதாள சாக்கடை கழிவு நீரை சுத்திகரிக்காமல் அப்படியே அங்குள்ள கால்வாயில் திறந்து விடுவதால் துர்நாற்றம் வீசுவதாகவும், நோய்கள் பரவுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டி பகுதியை சேர்ந்த மக்கள் முன்னாள் பஞ்சாயத்து துணைத்தலைவர் மஸ்தான், மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன், வேலு பிரபாகரன், துரை, கென்னடி மற்றும் பொதுமக்கள் ராமையன்பட்டி பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் நேற்று இரவு திரண்டனர்.

பின்னர் பஞ்சாயத்து அலுவலக வாசலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மானூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், ‘மாநகராட்சி பாதாள சாக்கடை கழிவு நீரை சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும். ஆனால் தற்போது அப்படியே வெளியே திறந்து விட்டுள்ளனர். இந்த கழிவுநீர் சத்திரம்புதுக்குளம், இலந்தைகுளம், சீனியப்பன் திருத்துகுளம் உள்ளிட்ட குளங்களில் கலக்கிறது.

இதனால் ராமையன்பட்டி, சங்குமுத்தம்மாள்புரம், ராஜகோபாலபுரம், தேனீர்குளம், சத்திரம்புதுக்குளம், எம்.ஜி.ஆர். நகர், அன்னை வேளாங்கண்ணி நகர் பகுதி மக்கள் துர்நாற்றத்தாலும், நோய் பரவுவதாலும் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ராமையன்பட்டி குப்பை கிடங்கு, பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை அகற்ற வேண்டும்’ என்று கூறினர். அப்போது போலீசார் இது தொடர்பாக மாநகராட்சி மற்றும் பாளையங்கோட்டை யூனியன் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத பொது மக்கள் அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு, போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.

Next Story