நெல்லையப்பர் கோவிலில் ஐம்பொன் சிலை பாதுகாப்பு மையத்திற்கு போலீஸ்காரருடன் சென்ற நபரால் பரபரப்பு அதிகாரிகள் விசாரணை
நெல்லையப்பர் கோவிலில் ஐம்பொன் சிலை பாதுகாப்பு மையத்திற்கு போலீஸ்காரருடன் சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை,
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் வளாகத்தில் நெல்லை மாவட்ட கோவில்களில் உள்ள ஐம்பொன்சிலைகளின் பாதுகாப்பு மையம் உள்ளது. இங்கு 250-க்கும் மேற்பட்ட ஐம்பொன்சிலைகள் உள்ளன. இந்த சிலைகள் பாதுகாப்பு மையத்திற்கு கோவில் பணியாளர்கள் 4 பேரும், ஆயுதம் தாங்கிய 2 போலீஸ்காரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இரவு நேரத்தில் ஒரு போலீஸ்காரரும், கோவில் பணியாளர்கள் 4 பேரும் பணியில் இருப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் நெல்லை மாநகர போலீசில் பணியாற்றக்கூடிய போலீஸ்காரர் ஒருவர் இரவில் பணிக்கு வந்தார். அப்போது கோவில் நடை அடைக்கப்பட்டு விட்டது. பணிக்கு வந்த போலீஸ்காரர் தனது உறவினர் ஒருவரையும் அழைத்து வந்து சிலை பாதுகாப்பு மையத்தின் அருகில் தன்னுடன் வைத்துக்கொண்டார்.
நள்ளிரவில் கோவில் பணியாளர்கள் அங்கு வந்தபோது போலீஸ்காரரிடம் இவர் யார் என்று கேட்டு உள்ளனர். அதற்கு போலீஸ்காரர் உரிய பதில் அளிக்கவில்லை. இதுகுறித்து கோவில் பணியாளர்கள் உடனே போலீசாருக்கும், அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து கோவிலை திறந்து அந்த நபரை வெளியேற்றி உள்ளனர். மேலும் அந்த நபர் இரவில் அதிக அளவில் சத்தம்போட்டு கதவு மேல் கல்லை தூக்கி எறிந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து நெல்லை மாநகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஐம்பொன்சிலை பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீஸ்காரரை இரவில் சோதனை நடத்த போலீஸ் அதிகாரி செல்லவேண்டும். ஆனால் அப்படி போலீசார் சோதனைக்கு செல்லாமலே சென்றது போல் அதிகாரிகள் கையெழுத்து போட்டு விடுவார்களாம். இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் மீது துறைவாரி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. போலீஸ்காரருடன் சென்ற நபர், சிலை திருட்டில் சம்பந்தப்பட்டவரா? என்று போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story