மணல் கடத்தலை தடுத்த வருவாய்த்துறை அதிகாரிகளை டிராக்டரை ஏற்றி கொல்ல முயற்சி வாலிபருக்கு வலைவீச்சு


மணல் கடத்தலை தடுத்த வருவாய்த்துறை அதிகாரிகளை டிராக்டரை ஏற்றி கொல்ல முயற்சி வாலிபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 15 Dec 2018 4:15 AM IST (Updated: 15 Dec 2018 12:26 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்தலை தடுத்த வருவாய்த்துறை அதிகாரிகளை டிராக்டரை ஏற்றி கொல்ல முயற்சி நடந்தது. வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பொன்னேரி,

திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் மணல் கடத்தலை தடுக்க வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி பொன்னேரி ஆர்.டி.ஓ. நந்தகுமார், தாசில்தார் புகழேந்தி, துணை தாசில்தார்கள் அருள்வளவன், செல்வகுமார் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு கொசஸ்தலை ஆறு, ஆரணியாறு உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளில் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொன்னேரியை அடுத்த சோழவரம் அருகே உள்ள காரனோடை வழியாக செல்லும் கொசஸ்தலை ஆற்றில் நேற்று மணல் கடத்தல் நடைபெறுவதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

பொன்னேரி துணை தாசில்தார் அருள்வளவன், சோழவரம் வருவாய் ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் காரனோடை மேம்பாலம் அருகே சென்ற போது 2 மினி லாரிகளிலும் ஒரு மாட்டு வண்டியிலும் மணல் திருடி கொண்டு வந்ததையும் மணல் கடத்தி வந்த 2 மினி லாரிகள், ஒரு மாட்டு வண்டியை பறிமுதல் செய்து சோழவரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து ஞாயிறு ஏரியில் மணல் கடத்தி டிராக்டரில் ஏற்றுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. துணை தாசில்தார் அருள்வளவன், வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் ஏரிக்கு சென்றனர். அப்போது அதிவேகமாக வந்த டிராக்டரை நிறுத்தும்படி கூறினர்.

ஆனால் டிரைவர் வருவாய்த்துறை அதிகாரிகளை டிராக்டரை ஏற்றி கொல்வது போல வந்தார். இதில் வருவாய்த்துறையினர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். டிரைவர் டிராக்டரை விட்டு விட்டு தப்பிச்சென்று விட்டார். இது குறித்து அவர்கள் சோழவரம் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் விசாரணையில் வருவாய்த்துறை அதிகாரிகளை டிராக்டரை ஏற்றி கொல்ல முயன்றவர் புதூர் கிராமத்தில் வசிக்கும் நவீன்(வயது 22) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story