ஓடும் பஸ்சில் துணிகரம்: மயக்க மருந்து தெளித்து தாயிடம் இருந்த 3 மாத குழந்தை கடத்தல் பெரம்பலூரில் பரபரப்பு


ஓடும் பஸ்சில் துணிகரம்: மயக்க மருந்து தெளித்து தாயிடம் இருந்த 3 மாத குழந்தை கடத்தல் பெரம்பலூரில் பரபரப்பு
x
தினத்தந்தி 15 Dec 2018 4:45 AM IST (Updated: 15 Dec 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் பஸ்சில் மயக்க மருந்து தெளித்து தாயிடம் இருந்த 3 மாத குழந்தை கடத்தல் சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா தேவையூர் நடுத்தெருவை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை. இவரது மனைவி கோவிந்தம்மாள்(வயது 30). இந்த தம்பதியினருக்கு ரஞ்சிதா(6) என்கிற மகளும், பிரினித்தா என்கிற 3 வயது பெண் கைக்குழந்தையும் உள்ளனர். பிச்சைபிள்ளை துபாய் நாட்டில் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். ரஞ்சிதா அதே பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்நிலையில் நேற்று பிரினித்தாவுக்கு வெள்ளி கொலுசு, அரணா கொடி ஆகியவை வாங்குவதற்காக கோவிந்தம்மாள், அந்த கைக்குழந்தையை தூக்கி கொண்டு பெரம்பலூருக்கு புறப்பட்டார். அப்போது அவர் பஸ் ஏறுவதற்காக பக்கத்து வீட்டில் வசிக்கும் வினோத்குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வாலிகண்டபுரம் பஸ் நிறுத்தத்திற்கு காலை 11.30 மணியளவில் சென்றார்.

பின்னர் பெரம்பலூர் செல்லும் ஒரு அரசு பஸ்சில் கோவிந்தம்மாள் கைக்குழந்தையுடன் பயணம் செய்தார். இதையடுத்து பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்திற்கு பஸ் வந்தபோது, பஸ்சில் இருந்த நினைவற்ற நிலையில் இருந்த கோவிந்தம்மாள் கீழே இறக்கி விடப்பட்டார். பின்னர் அவர் தன்னை அறியாமல் நடந்து சென்றுள்ளார். இதனை கண்ட அவருக்கு தெரிந்த நபர்கள் கோவிந்தம்மாளை நிறுத்தி, அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தனர்.

இதையடுத்து அவர் சுயநினைவுக்கு வந்தார். அப்போது கோவிந்தம்மாளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. தன்னுடன் பஸ்சில் தூக்கி கொண்டு வந்த தனது 3 மாத கைக்குழந்தை பிரினித்தாவையும், வெள்ளி நகைகள் வாங்க வைத்திருந்த ரூ.5 ஆயிரம் இருந்த மணி பர்சு, விலையுயர்ந்த செல்போன் ஆகியவற்றை காணாததால் அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கதறி அழுதவாறு குழந்தையை பஸ்சில் தேடினார். ஆனால் பஸ்சில் குழந்தை இல்லை. இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று போலீசாரிடம் கோவிந்தம்மாள் கூறுகையில், நான் எனது குழந்தையுடன் பஸ்சில் பயணம் செய்யும்போது, அருகே 45 வயது மதிக்கத்தக்க மஞ்சள் நிற சேலையை அணிந்திருந்த பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். தண்ணீர்பந்தல் வரை எனக்கு நினைவு இருந்தது. அதற்கு அப்புறம் எனக்கு நினைவு இல்லை. அதன்பிறகு அந்த பெண்ணும் பஸ்சில் இருந்து இறங்கி விட்டார். அந்த பெண் பஸ்சில் பயணி போல் நடித்து என் மீது மயக்க மருந்து தெளித்து என்னை நினைவு இழக்க வைத்து, எனது குழந்தையை கடத்தியும், பணம், செல்போன் ஆகியவற்றை எடுத்தும் சென்று விட்டார்.

எனது குழந்தையை எப்படியாவது கண்டுபிடித்து தாருங்கள் என்று கதறி அழுதார். இவ்வாறு கோவிந்தம்மாள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசாரை விசாரணை நடத்தி குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர். பஸ்சில் பெண் ஒருவர் பயணி போல் நடித்து தாயிடம் இருந்த கைக்குழந்தையை கடத்தி சென்ற சம்பவம் பெரம்பலூரில் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story