எருமை மாடுகளை கண்டு மிரண்டு ஓடிய யானை வாய்க்காலில் விழுந்து தத்தளிப்பு சோமரசம்பேட்டை அருகே ருசிகர சம்பவம்


எருமை மாடுகளை கண்டு மிரண்டு ஓடிய யானை வாய்க்காலில் விழுந்து தத்தளிப்பு சோமரசம்பேட்டை அருகே ருசிகர சம்பவம்
x
தினத்தந்தி 14 Dec 2018 10:45 PM GMT (Updated: 14 Dec 2018 7:50 PM GMT)

சோமரசம்பேட்டை அருகே ஓடிவந்த எருமை மாடுகளை கண்டு மிரண்டு ஓடிய யானை வாய்க்காலுக்குள் விழுந்து தத்தளித்தது.

சோமரசம்பேட்டை, 

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே வயலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஸ்ரீரங்கம் பகுதியில் இருந்து யானை வரவழைக்கப்பட்டது. திருமண நிகழ்வுகள் முடிந்ததும், மாலையில் பாகன் யானையை அழைத்து கொண்டு மண்டபத்தில் இருந்து புறப்பட்டார்.

யானையுடன் பாகன் நடந்து வந்தார். அதவத்தூர் தகர கொட்டகை என்ற இடத்தில் வந்தபோது, வயலில் மேய்ந்து கொண்டிருந்த எருமை மாடுகள் திடீரென்று சாலைக்கு ஓடிவந்து சண்டையிட்டன. அப்போது ஒன்றையொன்று முட்டி தள்ளுவதற்காக ஓடின. இதை பார்த்த யானை, எருமை மாடுகள் முட்ட வருவதாக நினைத்து மிரண்டு ஓடியது.

பாகன் யானையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றார். ஆனால் யானையை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பாகனும் யானையை கட்டுப்படுத்த பின்தொடர்ந்து ஓடினார். யானை சாலையோரத்தில் போடப்பட்டு இருந்த முள்வேலியை தகர்த்து கொண்டு தென்னந்தோப்புக்குள் ஓடியது. தொடர்ந்து அருகில் உள்ள உய்யகொண்டான் வாய்க்காலில் விழுந்தது.

இதனால் யானை தண்ணீரில் தத்தளித்தது. அல்லித்துறை பாலம் வரை தத்தளித்தப்படியே சென்றது. இதற்கிடையே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் அங்கு திரண்டனர். இதனால் யானை தண்ணீரில் அங்கும், இங்கும் சென்றபடி இருந்தது. பாகன் யானையை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை.

இந்நிலையில் இரவு நேரம் ஆனதால் யானையை கரையேற்ற முடியாமல் பாகன் தவித்தார். இச்சம்பவத்தால் வாய்க்கால் கரைப்பகுதியில் வசிப்பவர்கள் அச்சத்துடன் இருந்தனர். இதனால் அதவத்தூர் மற்றும் அல்லித்துறை பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

கும்கி என்ற திரைப்படத்தில் எருமை மாட்டை கண்டு யானை மிரண்டு ஓடுவது போன்ற ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதை பார்க்கும்போது நகைச்சுவையாக இருந்தாலும், எருமை மாட்டை கண்டு யானை மிரளுமா? என்ற சந்தேகமும் ஏற்படும். இந்நிலையில் நேற்று ஓடி வந்த எருமை மாடுகளை கண்டு யானை மிரண்டு ஓடிய ருசிகர சம்பவம், சினிமா காட்சியை நினைவுபடுத்துவதாகவும், பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

Next Story