படைப்புழுக்களால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களை உயர்மட்ட மதிப்பீட்டு குழு ஆய்வு


படைப்புழுக்களால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களை உயர்மட்ட மதிப்பீட்டு குழு ஆய்வு
x
தினத்தந்தி 15 Dec 2018 4:00 AM IST (Updated: 15 Dec 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

புள்ளம்பாடி ஒன்றியத்தில் படைப்புழுக்களால் பாதிக்கப்பட்ட மக்காசோளம் பயிரிடப்பட்ட விளைநிலங்களை உயர்மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்தனர்.

கல்லக்குடி,

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியத்தில் சுமார் 27 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் மக்காச்சோள பயிர்களை குருத்து பூச்சிகள், படைப்புழுக்கள் தாக்கின. இதில் மக்காச்சோள பயிர்கள் சேதம் அடைந்தன.

எனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள், அரசியல் கட்சியினர், கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும் போராட்டமும் நடத்தினர். இதனையடுத்து மாவட்ட கலெக்டர், பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்வதற்காக வேளாண்துறை அதிகாரிகளை கொண்டு உயர்மட்ட மதிப்பீட்டு குழுவை அமைத்தார்.

இதில் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பால்ராஜ், துணை இயக்குனர் ராஜேஸ்வரன் (மாநில திட்டம்), அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை பேராசிரியை யசோதா உள்ளிட்டவர்கள் இடம்பெற்று இருந்தனர். இந்த குழுவினர் கல்லக்குடி, வரகுப்பை, மேலரசூர், கீழரசூர், மால்வாய், ஒரத்தூர், கண்ணனூர், சரடமங்கலம், கல்லகம், கருடமங்கலம், சிறுகளப்பூர், பெருவளப்பூர், நம்புக்குறிச்சி, நெய்குளம், ஊட்டத்தூர், தெரணிபாளையம், குமுளூர், பி.கே.அகரம், புஞ்சை சங்கேந்தி, வ.கூடலூர், காணகிளியநல்லூர், தாப்பாய், கோவாண்டகுறி்ச்சி, புதூர்பாளையம், முதுவத்தூர் பகுதிகளில் மக்காச்சோளம் பயிரிடப்பட்ட விளை நிலங்களை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

ஆய்வு குழுவினரிடம், ஆண்டுதோறும் மானாவாரி பயிர்களை ஒரு போகம் மட்டுமே விவசாயம் செய்து வருகிறோம். இதில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்து விவசாயம் செய்துள்ள நிலையில் குருத்துப்பூச்சிகளும், படைப்புழுக்களும் பயிர்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளன. இதற்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வருங்காலங்களில் இதுபோல் பாதிப்பு ஏற்படாதவாறு படைப்புழுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். இதற்கிடையில் அழுந்தலைப்பூர்- சிறுகளப்பூர் இடையே உயர்மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

Next Story