ஊட்டி– எமரால்டு சாலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் தடுப்புச்சுவர்; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
ஊட்டி – எமரால்டு சாலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் தடுப்புச்சுவர் கட்ட நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.
ஊட்டி,
ஊட்டியில் இருந்து இத்தலார் வழியாக எமரால்டுக்கு சாலை ஒன்று செல்கிறது. இந்த சாலை குந்தா, மஞ்சூர், அப்பர்பவானி போன்ற பகுதிகளை இணைக்கிறது. ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இத்தலார், போர்த்தி, எமரால்டு, குந்தா, மஞ்சூர், அப்பர்பவானி உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள், அலுவலக வேலைகளுக்கு செல்கிறவர்கள், கூலி வேலைகளுக்கு போகிறவர்கள் என அனைவரும் அரசு பஸ்களே நம்பியே பயணம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. அப்போது ஊட்டி–எமரால்டு சாலையில் கோத்தகண்டி மட்டம் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலையின் ஒருபுறம் அந்தரத்தில் தொங்கியது போன்று காட்சி அளித்தது. மேலும் விவசாய விளைநிலங்களில் இருந்து அடித்து வரப்பட்ட மண் சாலையில் படிந்தது. அதன் காரணமாக சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் வாகனங்களில் சாலையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, சாலையில் படிந்து இருந்த மண் அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் அந்தரத்தில் தொங்கிய பகுதி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. ஒரு நாளுக்கு பிறகு அந்த சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது நெடுஞ்சாலைத்துறை மூலம் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. 10 மீட்டர் உயரத்திலும், 11 மீட்டர் நீளத்திலும் அமைக்கப்படுகிறது. இந்த பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் அப்பகுதியில் சாலை அகலப்படுத்தப்படுகிறது. ஊட்டி–எமரால்டு சாலை வளைந்து, நெளிந்து செல்லும் மலைப்பாதை ஆகும். அந்த சாலையோரம் குடிநீர் திட்டத்துக்காக பெரிய குழாய்கள் பதிக்கப்பட்டன. இதனால் சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. தற்போது குண்டும், குழியுமாக காணப்பட்ட இடங்கள் சீரமைக்கப்பட்டு உள்ளது. இதனால் நீர்ப்பிடிப்பு பகுதிகளை காண வரும் சுற்றுலா பயணிகள், பச்சை தேயிலையை ஏற்றி செல்லும் லாரிகள், மலைக்காய்கறிகளை கொண்டு செல்லும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.