முழு அடைப்பு: கூடலூர்– கேரளா இடையே வாகன போக்குவரத்து நிறுத்தம்


முழு அடைப்பு: கூடலூர்– கேரளா இடையே வாகன போக்குவரத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 15 Dec 2018 3:45 AM IST (Updated: 15 Dec 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

முழு அடைப்பு போராட்டம் காரணமாக கூடலூர்– கேரளா இடையே வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

கூடலூர்,

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதனை செயல்படுத்த கேரள அரசு தீவிரம் காட்டியது. இதை எதிர்த்தும், சபரிமலையின் புனிதத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் கேரளா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் சபரிமலையில் 144 தடை உத்தரவை கேரள அரசு பிறப்பித்தது. இதனால் நாளுக்குநாள் போராட்டங்கள் வலுத்து வருகிறது.

இதற்கிடையில் சபரிமலையில் 144 தடை உத்தரவை வாபஸ் பெற வலியுறுத்தி திருவனந்தபுரம் தலைமைச்செயலகம் முன்பு பா.ஜனதாவினர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களும் உண்ணாவிரதம் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முட்டடை பகுதியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டரான வேணுகோபாலன் என்பவர் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கண்டித்தும், சபரிமலையில் 144 தடை உத்தரவை வாபஸ் பெற வலியுறுத்தியும் கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்த பா.ஜனதா அழைப்பு விடுத்தது. அதன்படி நேற்று முழு அடைப்பு நடைபெற்றது. இதனால் அங்கு அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை.

இதேபோன்று கூடலூர்– கேரளா இடையே பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களும் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். கூடலூரில் இருந்து கோழிக்கோடு, கண்ணூர், பெருந்தல்மன்னா, மலப்புரம் உள்ளிட்ட பகுதிக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. மேலும் கேரள பஸ்களும் கூடலூருக்கு வரவில்லை. ஆனால் கேரள எல்லை வரை மட்டும் தமிழக பஸ்கள் இயக்கப்பட்டது. இருப்பினும் கேரளாவுக்குள் செல்ல முடியாத நிலை இருந்ததால், பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. மேலும் மைசூரூ, பெங்களூருவில் இருந்தும் கர்நாடகா பஸ்கள் கேரளாவுக்கு இயக்கப்படவில்லை.


Next Story