பம்மலில் 4 வாகனங்கள் தீ வைத்து எரிப்பு சம்பள பாக்கி தராததால் டிரைவர் ஆத்திரம்


பம்மலில் 4 வாகனங்கள் தீ வைத்து எரிப்பு சம்பள பாக்கி தராததால் டிரைவர் ஆத்திரம்
x
தினத்தந்தி 15 Dec 2018 4:13 AM IST (Updated: 15 Dec 2018 4:13 AM IST)
t-max-icont-min-icon

சம்பள பாக்கி தராததால் 4 வாகனங்களை தீ வைத்து எரித்த டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தாம்பரம்,

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 31). இவர், தனது சகோதரர்களுடன் சேர்ந்து கார், லோடு ஆட்டோக்கள் வைத்து தொழில் செய்து வருகிறார்.

இவர்களுக்கு சொந்தமான வாகனங்களை அதே பகுதியில் உள்ள ஒரு கோழி இறைச்சி கடையில் வாடகைக்கு விட்டு இருந்தனர். இரவு நேரத்தில் அந்த வாகனங்களை இறைச்சி கடை அருகேயே நிறுத்தி வைப்பது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் 2 கார்கள், 2 லோடு ஆட்டோக்களை இறைச்சி கடை அருகே நிறுத்தி வைத்து இருந்தனர். நேற்று அதிகாலையில் இந்த வாகனங்களுக்கு மர்மநபர்கள் தீ வைத்தனர். 4 வாகனங்களும் தீப்பிடித்து எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் தாம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், வாகனங்களில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் 4 வாகனங்களும் தீயில் எரிந்து நாசமானது.

இது பற்றி சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், நெல்லையை சேர்ந்த காமராஜ் என்பவர் கார்த்திக் சகோதரர்களிடம் லோடு ஆட்டோ டிரைவராக வேலைசெய்து வந்தார். காமராஜின் நடவடிக்கை சரியில்லாததால் 2 மாதங்களுக்கு முன்பு அவரை வேலையில் இருந்து நிறுத்தி விட்டனர்.

அவருக்கு சம்பள பாக்கி ரூ.16 ஆயிரத்தை கார்த்திக் சகோதரர்கள் தரவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த காமராஜ், இறைச்சி கடை அருகே நிறுத்தி இருந்த கார்த்திக் சகோதரர்களுக்கு சொந்தமான வாகனங்களை தீ வைத்து எரித்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள காமராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story