விக்கிரவாண்டி அருகே 4 வயது மகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை; கணவர் இறந்து 6 நாளில் விபரீத முடிவு


விக்கிரவாண்டி அருகே 4 வயது மகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை; கணவர் இறந்து 6 நாளில் விபரீத முடிவு
x
தினத்தந்தி 15 Dec 2018 5:15 AM IST (Updated: 15 Dec 2018 4:18 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே 4 வயது மகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். கணவர் இறந்து 6 நாளில் இந்த விபரீத முடிவை எடுத்தார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா கல்லடிக்குப்பம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ (வயது 35), கூலி தொழிலாளியான இவருக்கும் ரெட்டணை கிராமத்தை சேர்ந்த குப்புசாமி மகள் புவனேஸ்வரிக்கும் (27) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு விஷாலி (4) என்ற மகள் இருந்தாள்.

இந்நிலையில் ராஜூவிற்கும் அவரது மனைவி புவனேஸ்வரிக்கும் கடந்த சில மாதங்களாக அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராஜூ கடந்த 8–ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதன் காரணமாக புவனேஸ்வரி மிகவும் மனவேதனையில் இருந்து வந்தார். கணவர் இறந்த பிறகு தனக்கும், தன்னுடைய குழந்தைக்கும் இனி எந்த ஆதரவும் இல்லையே என்று அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் மனவருத்தத்துடன் கூறி அழுது, புலம்பி வந்தார்.

இந்த சூழ்நிலையில் கணவர் இறந்த சம்பவம், புவனேஸ்வரியை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. இதனால் அவர், தன்னுடைய கணவர் சென்ற இடத்திற்கே தானும் சென்றுவிட வேண்டும் என்று எண்ணி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் மட்டும் தற்கொலை செய்து கொண்டால் தன்னுடைய குழந்தை அனாதையாகி விடும் என்று கருதி மகளுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொள்ள புவனேஸ்வரி முடிவெடுத்தார்.

இன்று (சனிக்கிழமை) ராஜூவிற்கு கரும காரியம் செய்ய வேண்டிய நிலையில் நேற்று அதிகாலையில் புவனேஸ்வரி வீட்டிற்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்துள்ளனர். அப்போது வீட்டில் புவனேஸ்வரியும், அவரது மகள் விஷாலியும் இல்லை. இருவரையும் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். இருப்பினும் அவர்களை பற்றி எந்தவொரும் தகவலும் இல்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த புவனேஸ்வரியின் தாய் தமிழரசி, பெரியதச்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில், மாயமான புவனேஸ்வரி, விஷாலி ஆகிய இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் அதே கிராமத்தை சேர்ந்த பூங்காவனம் என்பவர், தன்னுடைய விவசாய நிலத்திற்கு சென்று பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சினார். பின்னர் அவர் கிணற்றை எட்டிப்பார்த்தபோது அங்குள்ள தண்ணீரில் புவனேஸ்வரியும், அவரது மகள் விஷாலியும் பிணமாக மிதந்தனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.இந்த வி‌ஷயத்தை கேள்விப்பட்டு புவனேஸ்வரியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்களும் அங்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கிணற்றுக்குள் இறங்கி புவனேஸ்வரி, அவரது மகள் விஷாலி ஆகியோரின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கணவர் இறந்த துக்கம் தாங்காமல் புவனேஸ்வரி தனது மகள் விஷாலியுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, இருவரின் உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் இறந்த 6 நாளில் துக்கம் தாங்காமல் மகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தினால் அந்த கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.


Next Story