உள்ளூர் குழும பகுதி எல்லை விரிவாக்க திட்டத்துக்கு கருத்து தெரிவிக்கலாம்; கலெக்டர் தகவல்
உள்ளூர் குழும பகுதி எல்லை விரிவாக்க திட்டத்துக்கு கருத்து தெரிவிக்கலாம் என்று கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு,
ஈரோடு உள்ளூர் குழும பகுதி எல்லை விரிவாக்க முழுமை திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
ஈரோடு உள்ளூர் திட்ட பகுதி தமிழக அரசால் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. தற்போது ஈரோடு மாநகராட்சி, சித்தோடு புதுநகர் வளர்ச்சி திட்ட பகுதி மற்றும் பெருந்துறை புதுநகர் வளர்ச்சி திட்டப்பகுதி சேர்க்கப்பட்டு 109 கிராமங்களுடன் புதிய ஈரோடு உள்ளூர் திட்ட குழும பகுதி உருவாக்க தமிழக அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 2031–ம் ஆண்டு வரை வளர்ச்சியை கணித்து ஈரோடு முழுமை திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி ஆஸ்பத்திரிகள், பூங்காக்கள், பொழுதுபோக்கு கூடங்கள் போன்ற பொதுமக்கள் பயன்பெறும் பகுதிகள், தொழிற்சாலை, குடியிருப்புகள் ஆகியவற்றை தனித்தனியாக தேவைக்கேற்ப ஒதுக்கீடு செய்ய கருத்துகளை தெரிவிக்கலாம். இதேபோல் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சாலை வசதிகளை மேம்படுத்தவும், சாலை அகலப்படுத்தவும் கருத்து தெரிவிக்கலாம்.
நில உபயோக விவரங்களை பொதுமக்கள் எளிதில் அறியும் வகையில் முழுமைத்திட்டத்தின் குறுந்தகடு நகல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள், உள்ளாட்சி நிர்வாகத்தை அணுகி திட்டத்தின் வரைபடத்தை பார்வையிட்டு கருத்துகளை தெரிவிக்கலாம். 10 நாட்களுக்குள் கருத்துகளை தயார் செய்து அடுத்து நடக்கவுள்ள ஆலோசனை கூட்டத்தில் கொடுக்கலாம். இந்த ஆலோசனைகள் பெற்ற பின்னர் நகர் ஊரமைப்பு சட்டத்திற்கு உள்பட்டு முழுமைத்திட்ட வரைபடத்தில் திருத்தங்கள் செய்து நகர் ஊரமைப்பு ஆணையாளர் மூலமாக அரசுக்கு சமர்ப்பிக்கப்படும்
இவ்வாறு மாவட்ட கலெக்டர் கதிரவன் கூறினார்.
கூட்டத்தில் சேலம் மண்டல நகர ஊரமைப்பு துணை இயக்குனர் வாழவந்தான், மாநகராட்சி ஆணையாளர் சீனிஅஜ்மல்கான், உதவி இயக்குனர் இளங்கோ உள்பட பலர் கலந்துகொண்டனர்.