பரமக்குடியில் புறம்போக்கு இடத்தில் இருந்த வீடு இடிப்பு; 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
பரமக்குடியில் புறம்போக்கு இடத்தில் இருந்த வீட்டை அரசு அதிகாரிகள் இடித்தனர். இதனை கண்டித்து 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பரமக்குடி,
பரமக்குடி பொன்னையாபுரத்தை சேந்தவர் தங்கவேலு. இவர் அப்பகுதியில் உள்ள புறம்போக்கு இடத்தில் வீடு கட்டியுள்ளார். தற்போது அந்த வீட்டில் அவரது மகன் உமாபதி (வயது 42) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர்களது உறவினரான விஜய்பாபு என்பவர் அரசு புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டுள்ள தங்கவேலுவின் வீட்டை அகற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதன்படி அந்த வீட்டை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் இடிக்காமல் இருந்துள்ளனர். இதைத்தொடர்ந்து விஜய்பாபு மீண்டும் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். மனுவை விசாரித்த நீதிபதி அந்த வீட்டை உடனடியாக இடிக்க உத்தரவிட்டார்.
இதன்படி பரமக்குடி தாசில்தார் பரமசிவன், நகராட்சி நகர் சீரமைப்பு அலுவலர் சரோஜா ஆகியோர் தலைமையில் வருவாய் துறையினர், போலீசார் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அந்த வீட்டை இடிக்க சென்றனர். அப்போது வீட்டில் இருந்த உமாபதியின் தாயார் லெட்சுமி (70), மனைவி கீதா (30) ஆகிய 2 பேரும் வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தும், கால அவகாசம் கேட்டும் அதிகாரிகளிடம் பேசினர். ஆனால் அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் வீட்டை இடிக்க தயாராகினர். உடனே லெட்சுமியும், கீதாவும் வீட்டிற்குள் ஓடிச்சென்று கதவை பூட்டிக் கொண்டு மண்எண்ணெய்யை தங்களது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இதை அறிந்த அதிகாரிகள், போலீசார் மற்றும் பொதுமக்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அவர்களை மீட்டு அழைத்து வந்தனர். தகவல் அறிந்ததும் தீயணைக்கும் படையினர் அங்கு விரைந்து வந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மின் இணைப்பை துண்டித்தனர். பின்பு உள்ளே இருந்த பொருட்களை அப்புறப்படுத்தியதும் வீட்டை இடித்தனர். வீடு இடிக்கப்படுவதைக்கண்ட உமாபதியின் குடும்பத்தினர் கதறி அழுதனர்.