தனியார் நிறுவன ஊழியரின் வங்கிக் கணக்கில் ரூ.1¼ லட்சம் திருட்டு; நடவடிக்கை எடுக்காத மேலாளர் மீதும் வழக்கு

வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி தனியார் நிறுவன ஊழியரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1¼ லட்சம் திருடப்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்காத வங்கி மேலாளர் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
மதுரை,
மதுரை சொக்கிகுளம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 55). தனியார் நிறுவன ஊழியர். கடந்த 10–ந்தேதி இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர் வங்கியில் இருந்து பேசுவதாகவும், உங்களது ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டது, விரைவில் புதிய கார்டு அனுப்பி வைக்கப்படும் என கூறி தற்போதுள்ள ஏ.டிஎம். கார்டின் ரகசிய எண்ணை கேட்டுள்ளார்.
இதனை நம்பிய கார்த்திகேயன், ஏ.டி.எம். கார்டின் ரகசிய எண்ணை தெரிவித்துள்ளார். செல்போன் தொடர்பை துண்டித்த சிறிது நேரத்தில் கார்த்திகேயனின் வங்கி கணத்தில் இருந்து ரூ.90 ஆயிரம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், சொக்கிகுளம் பகுதியில் உள்ள வங்கிக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி, தனது வங்கி கணக்கை முடக்கி வைக்குமாறு வங்கி மேலாளரிடம் கேட்டுள்ளார். ஆனால், வங்கி மேலாளர் வங்கி கணக்கை முடக்கி வைக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் மீண்டும் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த கார்த்திகேயன், தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் பேலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே முதல் முறை புகார் செய்தபோதே அது குறித்து நடவடிக்கை எடுத்திருந்தால் மறுபடியும் ரூ.40 ஆயிரம் திருடப்பட்டிருக்காது. எனவே இது குறித்து வங்கி மேலாளர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.