கலப்படத்தில் ஈடுபடுபவர்களை தப்பிக்க விடாமல் தண்டனை வழங்க வேண்டும் - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி
கலப்படத்தில் ஈடுபடுபவர்களை தப்பிக்க விடாமல் தண்டனை வழங்க வேண்டும் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி கூறினார்.
விருதுநகர்,
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியத்தாவது:–
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்தால் மரியாதை இருக்காது என்ற எண்ணத்திலோ அல்லது அ.தி.மு.க.வினரை மிகவும் கடுமையாக திட்டிவிட்டோம் என்ற காரணத்தினாலோ அ.ம.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்துள்ளார்.
பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு அபராதம் விதித்தால் மட்டும் போதாது தண்டனை வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. இப்பிரச்சினை தொடர்பாக ஐகோர்ட்டு சிறப்பான தீர்ப்புகளை வழங்கி வருகிறது. கடத்தலில் ஈடுபடுபவர்கள் கூட தப்பிக்கலாம் ஆனால் கலப்படத்தில் ஈடுபடுபவர்களை தப்பிக்க விடாமல் உறுதியாக தண்டனை வழங்க வேண்டும்.
பட்டாசு சம்பந்தமான வழக்கு சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் வினோத் ராய் பசுமை பட்டாசு குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். இதனையடுத்து இந்த வழக்கு ஜனவரி மாதம் 22–ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல்–அமைச்சர் பட்டாசு தொழிலை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். பட்டாசு தொழிலையும் பட்டாசு தொழிலாளர்களையும் பாதுகாக்க அவர் உறுதியான நடவடிக்கைகள் எடுப்பார்.
கஜா புயலால் தமிழகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மிகப்பெரிய பேரிடராகும் ஆனால் மத்திய அரசு இதனை தேசிய பேரிடராக அறிவிக்காமல் காலம் தாழ்த்திவருவது வேதனை அளிக்கிறது. வடக்கில் உள்ளவர்கள் வாழ வேண்டும் தெற்கில் உள்ளவர்கள் சாக வேண்டும் என்ற மனப்பான்மையை பிரதமரும் மத்திய அரசும் மாற்றிக்கொள்ளவேண்டும். தமிழகமும் இந்தியாவில் ஓர் அங்கம்தான் கஜாபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் வராதது வருத்தமளிக்கிறது. 10 லட்சம் பேர் இறந்தால் தான் பிரதமர் வருவாரோ என நினைக்க தோன்றுகிறது. அவர் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
20 தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறுவது தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்குத்தான். இடைத்தேர்தலுக்கான வியூகத்தை முதல்–அமைச்சரும், துணை முதல்– அமைச்சரும் வகுத்துவருகிறார்கள். எனவே 20 தொகுதிகளில் எப்போது இடைத்தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.கவிற்கு வெற்றி உறுதி.
விருதுநகரில் மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கான அறிவிப்பை விரைவில் முதல்வர் வெளியிடுவார் அதற்கு முன்னதாக பல் மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள் சிகிச்சை பிரிவிற்கான கட்டிடத்திற்கு கலெக்டர் சிவஞானம் தலைமையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அடிக்கல் நாட்டினார்.