ஆசிரியர் தேர்வு முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும்; மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல்


ஆசிரியர் தேர்வு முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும்; மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல்
x
தினத்தந்தி 15 Dec 2018 5:18 AM IST (Updated: 15 Dec 2018 5:18 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர் தேர்வில் நடந்த முறைகேடு பற்றி சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மதுரை,

2013–ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நலவாரிய சங்கத்தலைவர் இளங்கோவன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

ஆசிரியர் கல்விக்கான தேசிய குழு 23.8.2010 அன்று ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என அறிவிப்பாணையை வெளியிட்டது. ஆசிரியர் தகுதி தேர்வில் பல்வேறு விதிமுறைகளை ஆசிரியர் கல்விக்கான தேசிய குழு வகுத்தது. ஆசிரியர் தகுதி தேர்வில் 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றால்தான் தேர்ச்சி என அறிவித்தது. 2012–ல் வெயிட்டேஜ் மதிப்பெண் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் 60 சதவீத மதிப்பெண் தேர்வு மூலமாகவும், 40 சதவீத மதிப்பெண்கள் கல்வித்தகுதி அடிப்படையிலும் வழங்கப்பட்டது. 2013–ம் ஆண்டு மே மாதம் 22–ந்தேதி தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டு ஆகஸ்டு மாதம் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தகட்டத்திற்கு தயாராக இருந்தனர்.

இந்தநிலையில் கடந்த ஆண்டு (2017) ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியிப்பட்டது. இதில் 2013–ல் தேர்ச்சி பெற்றவர்களை சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்பட்டனர். எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களையும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைத்தது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் அரசு ஆசிரியராக பணிபுரியும் ஒருவரும் சான்றிதழ் சரிபார்க்க அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு வெளியிட்ட ஆசிரியர் காலிப்பணியிட அறிவிப்பாணை வெளிப்படையாக இல்லை. சான்றிதழ் சரிபார்ப்பில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.

வெயிட்டேஜ் மதிப்பெண்களை கணக்கிடாமல் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட, ஆசிரியர் தேர்வு அறிவிப்பாணை முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும். இதுதொடர்பான விவரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில், இந்த வழக்கு குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை ஜனவரி 7–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story