சட்டசபையில் காங்கிரஸ் - பாரதீய ஜனதா காரசார விவாதம்


சட்டசபையில் காங்கிரஸ் - பாரதீய ஜனதா காரசார விவாதம்
x
தினத்தந்தி 15 Dec 2018 5:51 AM IST (Updated: 15 Dec 2018 5:51 AM IST)
t-max-icont-min-icon

புதுவை சட்டசபையில் காங்கிரஸ், பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இடையே காரசார விவாதம் நடந்தது.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் மேகதாதுவில் அணைகட்டுவதற்கான திட்ட அறிக்கை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசின் தீர்மானம் முதல்-அமைச்சர் நாராயணசாமியினால் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது நடந்த விவாதம் வருமாறு:-

எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி: அரசு கொண்டு வந்த தீர்மானம் சரியாக உள்ளது. அதை விவாதமின்றி ஒரு மனதாக நிறைவேற்றி மத்திய அரசு அனுப்பலாம்.

சபாநாயகர் வைத்திலிங்கம்: எதிர்க்கட்சி தலைவர் ஆக்கப்பூர்வமான கருத்தை சொல்லி உள்ளார்.

அன்பழகன் (அ.தி.மு.க.): இதுபோன்ற தீர்மானத்தை நாங்களும் கொடுத்துள்ளோம். எனவே எம்.எல்.ஏ.க்களை பேச அனுமதிக்கவேண்டும்.

ரங்கசாமி: இதுதொடர்பாக விவாதிக்க வேண்டியதில்லை. எல்லாம் சரியாக உள்ளது.

அமைச்சர் கமலக்கண்ணன்: காவிரி தண்ணீர் பற்றி பேசி தொண்டை தண்ணீரை வற்ற வைக்கவேண்டாம்.

ரங்கசாமி: இந்த தீர்மானத்தை கர்நாடக அரசுக்கும் அனுப்புங்கள்.

சாமிநாதன் (பா.ஜனதா): கர்நாடக கூட்டணி அரசில் காங்கிரசும் உள்ளது. அவர்களுக்கு முதல்-அமைச்சர் இதுதொடர்பாக கடிதம் எழுதினாரா?

சபாநாயகர் வைத்திலிங்கம்: தீர்மானத்தில் எதுவும் சேர்க்க வேண்டியதில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சொல்லுகிறார்.

அன்பழகன் (அ.தி.மு.க.): காவிரி பிரச்சினையில் காங்கிரஸ், தி.மு.க. செய்த துரோகத்தையும் அதற்கான கண்டனத்தையும் சேர்க்கவேண்டும்.

அமைச்சர் நமச்சிவாயம்: தமிழக அரசு காரைக்காலுக்கு தண்ணீர் தராத துரோகத்தையும் இதில் சேர்க்கலாமா?

முதல்-அமைச்சர் நாராயணசாமி: காவிரி பிரச்சினையில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும் நாங்கள் எதிர்ப்பினை தெரிவிப்போம்.

தொடர்ந்து அ.தி.மு.க., பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் எழுந்து பேசினார்கள். ஆனால் அவர்களது மைக் இணைப்பினை துண்டிக்க சபாநாயகர் உத்தரவிட்டார்.

அமைச்சர் நமச்சிவாயம்: (பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை பார்த்து) தேர்தலில் ஜெயிக்க தடையில்லா சான்றிதழ் பாரதீய ஜனதா கொடுத்தது. நீங்கள் சென்று அதை கேன்சல் செய்து வாருங்கள்.

சாமிநாதன் (பா.ஜனதா): அணை கட்டக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். ஆனால் அதை முன்மொழிந்திருப்பதே காங்கிரஸ் அமைச்சர்தான்.

அமைச்சர் நமச்சிவாயம்: மாநில அரசின் அனைத்து முன்மொழிவுகளையும் அப்படியே ஏற்கிறீர்களா? புதுவை மாநிலத்தை நிதிக்குழுவில் சேர்க்க முதல்-அமைச்சர் நாராயணசாமி போராடி வருகிறார். அதை ஏற்றீர்களா?

லட்சுமிநாராயணன் (காங்): சட்டத்தை மதிப்பதாக இருந்தால் தடையில்லா சான்றிதழை திரும்ப பெற சொல்லுங்கள்.

அனந்தராமன் (காங்): நாங்கள் முன்மொழிவே அனுப்பாமல்தானே நீங்கள் 3 பேரும் வந்தீர்கள்.

செல்வகணபதி (பா.ஜனதா): நாங்கள் தீர்மானத்தை எதிர்க்கவில்லை.

சாமிநாதன்: தமிழகத்தில் மத்திய அரசை கண்டித்து தீர்மானம் போடவில்லை. இங்கு அ.தி.மு.க. தீர்மானம் போட சொல்கிறது. அவர்கள் நிலைதான் என்ன?

முதல்-அமைச்சர் நாராயணசாமி: தமிழக அரசு மத்திய அரசை எதிர்த்து வழக்குப்போட்டு உள்ளது. அதை தெரிந்துகொண்டு பேசுங்கள்.

அன்பழகன்: சாமிநாதன் எந்த கட்சி எம்.எல்.ஏ.? அவர் பாரதீய ஜனதாவா? எந்த கட்சியை சேர்ந்தவர்? என்பதை முடிவு செய்யவேண்டியது சபாநாயகர்தான். எனவே அவர் பிறரை பற்றி பேசாமல் இருப்பது நலம்.

லட்சுமிநாராயணன்: அவர் எந்த கட்சி என்பதை நிர்ணயிப்பதற்கான காலம் கடந்துவிட்டது. இனி கட்சி என்றால் பதவி பறிபோய்விடும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story