குடும்பத் தகராறில் விபரீதம்: இளம்பெண் தீக்குளித்து தற்கொலை 1½ வயது மகளும் உடல் கருகி இறந்த பரிதாபம்
வாணியம்பாடி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். 1½ வயது மகளும் உடல் கருகி உயிரிழந்தாள்.
வாணியம்பாடி,
வாணியம்பாடியை அடுத்த தும்பேரி கிராமத்தை சேர்ந்தவர் நந்தீஷ்வரன், கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சரஸ்வதி (வயது 23). இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுடைய மகள் தனலட்சுமி (1½). இந்த நிலையில் கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்தது.
நேற்று முன்தினம் இரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் இரவு 10 மணி அளவில் சரஸ்வதி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. தீ மளமளவென உடல் முமுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. மேலும் அங்கு படுத்து இருந்த தனலட்சுமி மீதும் தீ பரவியது.
தாய் – மகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்த போது சரஸ்வதி தீயில் கருகி சம்பவ இடத்திலேயே இறந்து கிடப்பது தெரியவந்தது. குழந்தை தனலட்சுமி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூருக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தையும் இறந்தது.
இதுகுறித்து அம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தீயில் கருகி உயிரிழந்த சரஸ்வதிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் திருப்பத்தூர் சப் – கலெக்டர் பிரியங்கா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.