மார்கழி மாதத்தை யொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் நடை திறப்பு நேரம் மாற்றம் 18-ந் தேதி வைகுண்ட வாசல் திறப்பு


மார்கழி மாதத்தை யொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் நடை திறப்பு நேரம் மாற்றம் 18-ந் தேதி வைகுண்ட வாசல் திறப்பு
x
தினத்தந்தி 16 Dec 2018 4:00 AM IST (Updated: 15 Dec 2018 9:30 PM IST)
t-max-icont-min-icon

மார்கழி மாதத்தையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் நடை திறப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. 18-ந் தேதி வைகுண்ட வாசல் திறப்பு நடக்கிறது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். கோவிலில் ஆண்டு தோறும் மாணிக்கவாசகர் உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டிற்கான மாணிக்கவாசகர் உற்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை இந்த உற்சவம் நடைபெற உள்ளது.

மாணிக்கவாசகர் உற்சவம் நடைபெறும் 10 நாட்களும், தினமும் காலையில் அபிஷேகம், தீபாராதனை முடிந்து மாணிக்கவாசகர் மாட வீதி உலாவும், மாலையில் நடராஜருக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெறும்.

வழக்கமாக அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். ஆனால் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்படும்.

மேலும் 18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இதேபோல சாமி சன்னதியில் உள்ள பாமா, ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் செய்யப்பட உள்ளது. பின்னர் அதிகாலை 5 மணி அளவில் வைகுண்ட வாசல் திறப்பு நடக்கிறது.

Next Story