உத்தனப்பள்ளி அருகே 80 காட்டு யானைகள் முகாம் விவசாயிகள் கவலை


உத்தனப்பள்ளி அருகே 80 காட்டு யானைகள் முகாம் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 16 Dec 2018 4:00 AM IST (Updated: 15 Dec 2018 10:03 PM IST)
t-max-icont-min-icon

உத்தனப்பள்ளி அருகே வனப்பகுதியில் 80 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ராயக்கோட்டை, 

கர்நாடக மாநிலம் பன்னார்கட்டாவில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் 200-க்கும் மேற்பட்ட யானைகள் வந்துள்ளன. ராகி பயிர் அறுவடையை குறி வைத்து வந்துள்ள இந்த காட்டு யானைகள் பல குழுக்களாக பிரிந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வந்தன.

இந்த நிலையில் ஓசூர் வனச்சரகம், உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு காப்புக்காட்டில், 80-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இவை விவசாய பயிர்களை நாசம் செய்து வந்தன. இந்த யானைகளை ஓசூர் வனச்சரகர் சீதாராமன் தலைமையிலான வனத்துறையினர் போராடி தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டினார்கள். அதில் 50 யானைகள் மட்டும் அங்கு சென்றன.

மீதம் உள்ள 30 யானைகள் சானமாவு காட்டில் இருந்தன. இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு சென்ற 50 யானைகளும் போன வேகத்தில் நேற்று அதிகாலை மீண்டும் சானமாவு காட்டிற்கு வந்து விட்டன. தற்போது சானமாவு காட்டில் மொத்தம் 80 யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இந்த யானைகள் இரவு நேரத்தில் அருகில் உள்ள பீர்ஜேப்பள்ளி, சானமாவு, பாத்தகோட்டா, ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விவசாய பயிர்களை சேதப்படுத்தலாம் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சானமாவு காட்டில் 80 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் யாரும் இரவு நேரத்தில் வெளியே வர வேண்டாம் என்றும், இரவு விவசாய நிலங்களில் காவலுக்கு இருக்க வேண்டாம் என்றும், வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். தற்போது சானமாவு காட்டில் உள்ள 80 யானைகளையும் தேன்கனிக்கோட்டை வழியாக கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Next Story