இளைஞர்களுக்கு மூளைச்சலவை ரவுடிகளுக்கு எச்சரிக்கை விடுத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ‘வாட்ஸ்-அப்’பில் வெளியான ஆடியோவால் பரபரப்பு


இளைஞர்களுக்கு மூளைச்சலவை ரவுடிகளுக்கு எச்சரிக்கை விடுத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ‘வாட்ஸ்-அப்’பில் வெளியான ஆடியோவால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 Dec 2018 11:15 PM GMT (Updated: 15 Dec 2018 5:53 PM GMT)

கோவில்பட்டியில் இளைஞர்களை மூளைச்சலவை செய்த ரவுடிகளுக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் ஆடியோ ‘வாட்ஸ்-அப்’பில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் செல்போனில் ரவுடிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசிய ஆடியோ ‘வாட்ஸ்-அப்’பில் பரவி வருகிறது. அந்த ஆடியோவில், கற்பகராஜா, ராஜதுரை ஆகியோரை தூக்கி விட்டேன். பாய், உலகு ஆகியோர் ஒளிந்து கொண்டுள்ளனர். அவர்களையும் விரைவில் தூக்கிடுவேன். அவர்கள் பணம், சாராயம் கொடுத்து உங்களை பயங்கரவாதியாக மாற்றி வைத்துள்ளனர். உன் குடும்பத்தை காப்பாற்றுகின்ற வழியை பார். இனிமேல் அப்துல்லா சண்டியர், பாய் சண்டியர் என்று ‘வாட்ஸ்-அப்’பில் யாராவது குரூப் ஆரம்பித்தால், அத்தனை பேரையும் கைது செய்வேன். கனகராஜ், மந்திரமூர்த்தியை யாரும் வெட்ட விட மாட்டோம். இதனை பாய், உலகு ஆகியோரிடம் சென்று சொல் என்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கூறுவது பதிவாகி உள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு கோவில்பட்டியில் முகமது ரபீக்கின் மகனான கல்லூரி மாணவர் அப்துல்லா கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிக்குப்பழியாக அதே பகுதியை சேர்ந்த காந்தாரி மகன் கருப்பசாமி சாத்தூரில் ஓடும் பஸ்சில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முகமது ரபீக் மற்றும் கூலிப்படையினர் கைது செய்யப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு காந்தாரி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கிலும் முகமது ரபீக் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில் காந்தாரி குடும்பத்தில் உள்ள மற்றவர்களையும் கொலை செய்ய, ‘வாட்ஸ்-அப்’பில் குரூப் ஆரம்பித்து, இளைஞர்களை மூளைச்சலவை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த இளைஞர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு எச்சரித்து உள்ளனர். அதனை பதிவு செய்து ‘வாட்ஸ்-அப்’பில் வெளியிட்டதாக தெரிகிறது.

ரவுடிகளுக்கும், கொலை குற்றவாளிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் சப்-இன்ஸ்பெக்டர் பகிரங்கமாக மிரட்டிய பேச்சு வாட்ஸ்-அப்பில் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story