பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானை, அடுப்பு தயாரிக்கும் பணிகள் தீவிரம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஏர்வாடி அருகே மாவடியில் மண்பானை, அடுப்பு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஏர்வாடி,
ஏர்வாடி அருகே மாவடியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானைகள் உற்பத்தி களை கட்டியுள்ளது. சிறிய பானைகள் முதல் பெரிய பானைகள் வரை பல்வேறு வடிவங்களில் தயாராகி வருகிறது. மேலும் மண்அடுப்புகள், பானை மூடிகளும் தயார் செய்யப்படுகிறது.
இங்கு உற்பத்தியாகும் பானைகள் நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் கேரளாவிற்கும் கொண்டு செல்லப்படுகிறது. பானைகள் ரூ.25 முதல் ரூ.300 வரையிலும், அடுப்புகள் ரூ.60 முதல் ரூ.350 வரையிலும் விற்பனை ஆகிறது.
ஆனால், போதிய மண் கிடைக்காததால் மண்பாண்ட தயாரிப்பு தொழில் பாதிக்கப்பட்டு உள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘குளங்களில் மண் எடுப்பதற்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் மண்பாண்டங்கள் தயாரிக்க தேவையான மண்ணை கொண்டுவர முடியவில்லை.
எனவே குளங்களில் இலவசமாக மண் எடுக்க அரசு அனுமதிக்க வேண்டும். ஏற்கனவே மண்பாண்ட தயாரிப்பு தொழில் நலிவடைந்து வருகிறது.
இதனால் மண்பாண்ட தொழிலை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story