2 மாதங்களுக்கு பிறகு மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
2 மாதங்களுக்கு பிறகு மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
அம்பை,
நெல்லை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் மணிமுத்தாறும் ஒன்றாகும். இங்குள்ள அருவியில் ஆண்டு தோறும் தண்ணீர் விழும். இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டும் இல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மணிமுத்தாறு அருவிக்கு வந்து குளித்துச் செல்வார்கள்.
‘ஒகி‘ புயல் காரணமாக மணிமுத்தாறு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் உள்ள நடைபாதை, படிக்கட்டுகள் மற்றும் பாதுகாப்பு கம்பிகள் உடைந்து சேதமானது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து படிக்கட்டுகள் மட்டும் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கினார்கள்.
இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் அருவியில் அச்சமின்றி குளிக்க அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தினர். இதையடுத்து புலிகள் காப்பக கள இயக்குனர் அன்வர்தீன், அம்பை துணை இயக்குனர் பார்கவிதேஜா ஆகியோர் உத்தரவுப்படி அம்பை வனச்சரகர் கார்த்திகேயன் தலைமையில் கடந்த செப்டம்பர் மாதம் 18-ந் தேதி அருவி பராமரிப்பு மற்றும் சுற்றுலா பயணிகள் மணிமுத்தாறு அருவி பகுதியை ரசிக்கும் வகையில் அருவி கரையையொட்டி பார்வை மாடம் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் பெய்த பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக சுற்றுலா பயணிகள் அருவியல் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கூறுகையில், நான் எனது குடும்பத்துடன் மணிமுத்தாறு அணையை பார்க்க வந்தேன். ஆனால் இங்கு வந்த பின்னர் தான் தெரிந்தது மணிமுத்தாறு அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதனால் நான் குடும்பத்துடன் அருவியில் குளித்து மகிழ்ந்துள்ளோம் என்றார்.
Related Tags :
Next Story