கஜா புயலால் அழிந்த தென்னை மரங்களுக்கு 30-ம் நாள் நினைவு பேரணி பட்டுக்கோட்டையில் நடந்தது


கஜா புயலால் அழிந்த தென்னை மரங்களுக்கு 30-ம் நாள் நினைவு பேரணி பட்டுக்கோட்டையில் நடந்தது
x
தினத்தந்தி 16 Dec 2018 4:30 AM IST (Updated: 16 Dec 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் அழிந்த தென்னை மரங்களுக்கு பட்டுக்கோட்டையில் 30-ம் நாள் நினைவு பேரணியும் கண்ணீர் அஞ்சலியும் நடந்தது.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகாக்களில் ஏறக்குறைய 65 ஆயிரம் ஹெக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக தென்னை இருந்து வந்தது. கடந்த மாதம் வீசிய கஜா புயலால் 1 கோடியே 25 லட்சம் தென்னை மரங்கள், தென்னங்கன்றுகள் வேரோடு சாய்ந்து தென்னை விவசாயிகளுக்கு பெருத்த சேதத்தை உண்டு பண்ணியிருப்பதாக சேத மதிப்பீட்டில் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தென்னை விவசாயிகள், பல்வேறு இடங்களிலும் புயலால் இழந்த தென்னை மரங்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் இழப்பீடும், இழந்த தென்னைமரங்களை அகற்ற செலவுத் தொகையும் வழங்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து பட்டுக்கோட்டையில் நேற்று காலை கஜா புயலால் சேதம் அடைந்த தென்னை மரங்களுக்கு 30-ம் நாள் நினைவு பேரணியும், கண்ணீர் அஞ்சலியும் நடந்தது. பட்டு்க்கோட்டை காசாங்குளம் வடகரையில் இருந்து இந்திரா காந்தி யூத் பவுண்டேஷன், தஞ்சை மாவட்ட டெல்டா இளைஞர் எழுச்சி இயக்கம், டெல்டா காக்கும் கரங்கள் அமைப்பு ஆகியவைகளின் சார்பில் பேரணி நடந்தது.

இந்த பேரணிக்கு இந்திரா காந்தி யூத் பவுண்டேஷன் நிறுவனர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வீரசேனன், பண்ணவயல் ராஜாத்தம்பி ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர்.

பேரணியில், திறந்த வேனில் புயலில் சாய்ந்த தென்னை மரத்திற்கு பாடை கட்டி மாலை அணிவித்து ஊர்வலத்தின் முன்னால் செல்ல, துக்கத்தைக் குறிக்கும் வகையில் டிரம்மில் ஒற்றைக் கொட்டு அடித்துக் கொண்டு சென்றனர்.

பேரணி பட்டுக்கோட்டை காசாங்குளம் வடகரையில் இருந்து புறப்பட்டு தலைமை தபால் நிலையம் பெரியதெரு, மணிக்கூண்டு, தலையாரித்தெரு, அறந்தாங்கி ரோடு, காந்தி சிலை சதுக்கம், அண்ணா சிலை பெரிய கடைத்தெரு, வழியாக மீண்டும் காசாங்குளம் வடகரையை அடைந்தது. பேரணியில் அனைத்துக் கட்சியை சேர்ந்த விவசாயிகளும் கலந்து கொண்டனர். பேரணி முடிவில் அரசுக்கு கோரிக்கைகள் அடங்கிய தீர்மானம் வாசிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் படிக்கும் கல்லூரி மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தையும் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். விவசாயத்திற்காக அரசு, தனியார், கூட்டுறவு, சுயஉதவி, தேசிய வங்கிகளில் பெற்று உள்ள அனைத்து கடன்களையும் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். விழுந்து கிடக்கும் தென்னை மரங்களை அகற்றவும், இலவசமாக தென்னங்கன்றுகளையும், விவசாய இடு பொருட்களையும் அரசு வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு வேண்டு கோளாக விடப்பட்டது.

முடிவில் புயலில் சாய்ந்த தென்னை மரங்களுக்கு 5 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு பெண்கள் ஒப்பாரி வைத்து இரங்கல் தெரிவித்த பின் கூட்டம் முடிவடைந்தது.

Next Story